Translate

Thursday, 27 February 2020

மதுரை வீரன் மயாண்டி பாரதி

               மதுரை வீரன் மாயாண்டி பாரதி 
 " அரிதாள் அறுத்துவர மறுதாள் பயிராகும் அரிதாளின் கீழாக ஐங்கலந் தேன் கூடுகட்டும் மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெலென்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை " என்று மதுரை மாநகரின் செல்வச் செழிப்பினைப் பற்றிப் பழந்தமிழ் நூல் கூறுகின்றது ! " வயலில் விளைந்த நெற்கதிரை அறுத்தவுடன் மீண்டும் பயிர் வளர்ந்து விடும் ! அவ்வாறு ஏற்கனவே அரிந்திட்ட தாளின் நெற்பயிரின் கீழ்ப்பகுதியில் தேனீக்கள் கூடுகட்டும் . களத்து மேட்டில் மாடுகளை வைத்துச் சுற்றி வந்து போரடித்தால் செந்நெல் ( ஓயாது ) மிகுதியாக வந்து கொண்டேயிருக்கும் என்பதால் மாடுகளுக்குப் பதிலாகக் களத்து மேட்டில் யானைகளைக் கட்டிப் போரடிக்கும் அழகான மதுரை " என்று மதுரையின் சிறப்புப் பற்றிப் புலவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார் பார்த்தீர்களா ? வையை நகரம் , கூடல்நகர் , ஆலவாய் , நான்மாடக்கூடல் , மல்லல் மூதூர் , என்பன போன்ற பல பெயர்களால் இலக்கியங்களில் கூறப்படும் மதுரை மாநகருக்கு உறங்கா நகரம் ( Sleepless City ) என்ற பெயரும் உண்டு . இரவிலும் பகலிலும் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றதென்ற காரணத்தால் அந்நகருக்கு இத்தகைய சிறப்புப் பெயர் ஏற்பட்டது . வட இந்தியாவில் உள்ள சண்டிகர் நகரம் , நகரமைப்பு விதிகளை உள்ளடக்கிப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட நகரமாகும் . ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமைப்பு விதிகளை மையமாகக் கொண்டு மிகவும் திறம்பட அமைக்கப்பட்ட மாநகரம் மதுரை மாநகரமாகும் " என்று நகர்ப்புற வல்லுநர்கள் கூறுகின்றனர் .
       
தமிழ்ச்சங்கங்களை நிறுவி முத்தமிழையும் வளர்த்த மாபெரும் பெருமை , மதுரை மாநகருக்கு மட்டுமே உரியது ! என்பது அசைக்கமுடியாத உண்மை . " நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே " என்று முக்கண்ணன் முன்னின்று வாதிட்ட நக்கீரன் பற்றிய செய்திகளையும் , திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் " புட்டுக்கு மண் சுமந்து வையைக் கரையில் பிரம்படி பட்டதாகக் " கூறப்படும் நிகழ்ச்சிகள் முதலிய எண்ணற்ற புராணச் செய்திகளையும் உள்ளடக்கிய ஒப்பற்ற நகரம் மதுரை மாநகரமாகும் .

 இத்தகு சிறப்புடைய மதுரை மாநகரில் , தச்சுத் தொழிலில் தலைசிறந்து விளங்கிய புகழ்பெற்ற ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர்  . அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகுதியும் இல்லை . அக்காலப் பேருந்துகள் பக்கவாட்டில் நிலக்கரி பாய்லரைக் கொண்டிருந்தன . அவைகளும் மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை விருதுநகர் மற்றும் பெரியகுளம் வரையிலேயே சென்றுகொண்டிருந்தன ! ஆகவே பெருவாரியான மக்களுக்குப் போக்குவரத்து சாதனங்களாக , மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகளே பயன்பட்டு வந்தன . இளைஞர்கள் , பெரும்பாலும் இளங்காளைகளால் மிக விரைவாக இழுத்துச் செல்லப்படும் " ரேக்ளா " வண்டியில் செல்வார்கள் . மிகவும் வசதி படைத்தவர்கள் குதிரைகளால் இழுக்கப்படக்கூடிய சாரட் வண்டிகள் என்று சொல்லப்படும் " பீட்டன்ஸ் வண்டிகளை " வைத்திருப்பர் . இந்நாளில் " சொகுசு பஸ் " என்றழைக்கப்படும் பேருந்துகளைப் போல அந்நாளில் " பீட்டன்ஸ் வண்டிகள் " என்றழைக்கப்பட்ட குதிரை வண்டிகள் நிலவி வந்தன !

பீட்டன்ஸ் வண்டிகள் தயாரிப்பதில் மதுரையிலும் , அதன் சுற்றுவட்டாரத்திலும் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் " இருளப்ப ஆச்சாரியார் " என்பவராவார் . பீட்டன்ஸ் வண்டிகள் தயாரிப்பதில் அவருக்கு நிகராகச் சொல்லத்தக்கவர்கள் அக்காலத்தில் வேறு எவருமில்லையென்றே கூறலாம் . . தயாரிக்கும் வண்டிகளுக்காகப் பல மாதங்கள் காத்திருந்து பெற்றுச் செல்வார்கள் என்பதிலிருந்து அவர் சிறப்பு நமக்கு நன்கு புலனாகின்றதல்லவா ! " பீட்டன்ஸ் இருளப்ப ஆச்சாரியார் " என்று அன்புடன் அழைக்கப்பட்ட இருளப்ப ஆச்சாரியார்க்குச் சுடலி அம்மாள் தில்லையம்மாள் ஆகிய இரு மனைவியரும் , பதின் மூன்று குழந்தைகளும் இருந்தனர் . இவர்களில் 1917ஆம் ஆண்டில் பதினோராவதாகப் பிறந்த குழந்தைக்கு மாயாண்டி " என்று அவர் பெயர் சூட்டினார் . " பிற்காலத்தில் அரசியல் வாழ்விலும் , சமுதாய வாழ்விலும் புரட்சிகரமான பல மாயச் செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்ற சிறுவன் என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்தே " மாயாண்டி " என்று பெயர் வைத்தார் போலும் ! அந்தச் சிறுவன் மாயாண்டியே பிற்காலத்தில் தமிழகத்தின் தலைசிறந்த " தியாகி மாயாண்டி பாரதி " என்பது வரலாறு கண்ட உண்மையாகும் !

பதினோராவது குழந்தையான மாயாண்டிக்கு மற்ற குழந்தைகளைப் போல , சரியாகப் பேச்சு வரவில்லை ; அக்கம் பக்கத்தார் அவனை " ஊமை " என்றே அழைத்தனர் . " குமரகுருபர சுவாமிகள் " போல ஊமைக்குழந்தையாய்த் திகழ்ந்த மாயாண்டி , பிற்காலத்தில் பேச்சாற்றல் பெற்று நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு அனல் கக்கும் பிரச்சாரங்களும் , திருமண விழாக்களில் கலந்து கொண்டு தத்துவக் கருத்துக்களும் எடுத்துச் சொல்லும் மாயச் செயல் செய்வான் என்பதையும் தீர்க்க தரிசனமாக உணர்ந்தோ என்னவோ மாயாண்டி என்று பெயரிட்டனர் ! மாயாண்டி ஐந்து வயதடைந்தபோது மதுரையில் காக்காத் தோப்பு என்னும் பகுதியிலிருந்த ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார் ! அக்கால வழக்கத்திற்கேற்பப் பள்ளியில் சேர்க்கப்படும் நாளில் மாயாண்டிக்கு வைரக்கடுக்கன் காதில் அணிவிக்கப்பட்டது ; கையில் தங்கக் காப்பு இடப்பட்டுத் தலையில் பட்டுக் குல்லாய் வைக்கப்பட்டது . மேளதாளத்துடன் சாரட் வண்டியில் அவர் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் எழுத்தாணி வைத்து ஓலைச் சுவடியில் எழுதக் கற்றுக் கொடுத்தார்கள் . அந்த ஏட்டுப் பள்ளிக் கூடத்தின் பெயர் ராம ஐயங்கார் பள்ளக்கூடம் " என்பதாகும் . வகுப்புக்கள் திண்ணையில் தான் நடைபெறும் . அங்கு மூட்டைப்பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் அந்தப் பள்ளிக்கு மூட்டைப் பூச்சிப் பள்ளிக்கூடம் " என்றும் அந்த ஆசிரியருக்கு " மூட்டைப்பூச்சி வாத்தியார் " என்றும் பட்டப்பெயர்கள் நிலைபெற்றிருந்தன .

இந்நிலையில் மாயாண்டிக்குச் சரிவரப் பேச வராததால் , அருகில் சம்பந்தர் தெருவிலிருந்த நகராட்சிப் பள்ளியில் சேர்த்தார்கள் . அந்தப் பள்ளிக்கூடம் செவிடர் ஊமையருக்கான பள்ளி யாகும் . அங்கு சேர்க்கப்பட்ட சில மாதங்களில் எதிர்பாராத வகையில் மாயாண்டிக்குப் பேசுந்திறன் வந்துவிட்டது . ஆகவே அந்தப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு அருகிலிருந்த " ஸ்வீடன் மிஷன் பெண்கள் பாடசாலையில் " சேர்க்கப்பட்டார் . அங்கு சேர்க்கப்பட்ட சில மாதங்களில் அந்தப் பள்ளியை ஆய்வு செய்யும் பெரிய அதிகாரி வந்தார் . மாயாண்டியைப் பார்த்த அவர் , " மாயாண்டி சற்று உயரமாக வளர்ந்திருக்கும் பெரிய பையனாக இருப்பதால் அந்தப் பள்ளியை விட்டு உடனடியாக நீக்கப்பட வேண்டும் " என்று தலைமையாசிரியருக்கு உத்தரவிட்டார் ; விளைவு ? பள்ளியிலிருந்து மாயாண்டி நீக்கப்பட்டார் . - அதன் பிறகு அவர் , நகராண்மைப் பள்ளியில் சேர்ந்து முறைப்படி ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை கற்றுத் தேறினார் . இவரது ஆசிரியராகத் திகழ்ந்த " துரைசாமி நாயுடு " என்பவர் , இவரது ஆர்வத்தை உற்று நோக்கி " அமெரிக்கன் மிஷன் நடுநிலைப்பள்ளியில் " இவரைச் சேர்த்தார் . அந்தப் பள்ளி மதுரையிலுள்ள " யுசிஐ பள்ளி " என்ற பள்ளியின் கிளையாகும் . அப்பள்ளியில் மாயாண்டி தமது ஆறாவது , ஏழாவது மற்றும் எட்டாவது வகுப்புக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார் . அக்காலத்தில் மதுரையில் தெருக்கூத்துக்கள் அடிக்கடி நடைபெறும் . அவற்றுள் குறிப்பிடத்தக்க சிறப்புடையது கட்டபொம்மன் தெருக்கூத்தாகும் !

கட்டபொம்மன் தெருக்கூத்து நாடகமாகவே நடைபெறும் . இந்த நாடகம் தினசரி சில காட்சிகள் வீதம் ஒரு வாரம் நடக்கும் . சில வேளைகளில் இந்த நாடகம் முடிவடையப் பத்து நாட்களுக்கு மேலாகிவிடும் . மதுரையில் நிகழ்வுற்ற தெருக்கூத்துக்களில் , கட்டபொம்மன் நாடகம் மாயாண்டியின் சிந்தனையில் ஊடுருவி நின்றது ஆங்கிலேய எதிர்ப்பு உணர்வை இந்த நாடகம் அவரிடம் தூண்டியது . " வானம் பொழியுது ; பூமி விளையுது மன்னவன் காணிக்கை ஏதுக்கடா " என்ற பாடல் வரிகள் அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டன . கட்டபொம்மன் கப்பம் கட்ட மறுப்பது , ஆங்கிலேயரால் அச்சுறுத்தப்படுவது , அவர்களுக்கு அடிபணிய மறுத்துப் போர்க்களத்தில் கட்டபொம்மன் வெள்ளையரைச் சந்திப்பது , இறுதியில் தூக்கில் தொங்கவிடப்படுவது போன்ற பாடல்களோடு கூடிய அனைத்துக் காட்சிகளும் மாயாண்டியின் சிந்தனையில் பதிந்து மனத்திரையில் நீங்காது நிழலாடிக் கொண்டிருந்தன . அந்தப் பிஞ்சு நெஞ்சில் சுதந்திர வேட்கை சிறிது சிறிதாக வேரூன்றத் துவங்கியது .

அதன் விளைவு ? நினைக்கவே நெஞ்சம் தடுமாறுகிறது . நன்மை தீமைகளைப் பிரித்தறியும் ஆற்றல் முழுமையாக அடைவதற்கு முன்பாக முதன் முதலாக வீரர் மாயாண்டி ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சி மனத்தை உருக்கும் நிகழ்ச்சியாக அமைந்து விட்டது . ஒருநாள் , ஏழாம் வகுப்பு ஆசிரியர் , கரும்பலகையில் பாடங்களை எழுதி , மாணவர்களுக்கு விளக்கமாகப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார் . எல்லா மாணவர்களும் உற்றுக்கவனித்துக் கொண்டிருந்த வேளையில் மாயாண்டி மட்டும் பள்ளிக்கூடச் சிறிய தடுப்புச் சுவருக்குப் பின்புறம் நிகழ்ந்து கொண்டிருந்ததை ஆர்வத்துடன் உற்றுநோக்கிக்கொண்டிருந்தான் . சுவருக்குப் பின்புறம் ஒரு கள்ளுக்கடை இருந்தது . அதற்கு மகிச்சயம் கள்ளுக்கடை என்று பெயர் . அங்கே மறியல் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது . மறியல் செய்தவர்களை எதிர்பாராதவண்ணம் போலீசார் தடியால் அடித்தார்கள் . மறியல் செய்தவர்கள் கள்ளுக்கடைக்குள்ளிருந்து கல்வீச்சு நடைபெற்றது மறியலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,போலீசார் மீதும் கள்ளுக்கடையின் உள்ளிருப்பவர்கள் மீதும் கற்களை திரும்ப வீசினார்கள் மாயாண்டியால் அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை , எழுந்து ஒருவிரலை உயர்த்தி அவனது " அவசரத் தேவை அது என்று நினைத்த ஆசிரியர் , வெளியே போவதற்கு அனுமதி வழங்கினார் .

மெதுவாக வெளியே வந்த மாயாண்டி தடுப்புச்சுவரைக் கடந்ததும் வேகமாக கள்ளுக்கடையருகே ஓடினான் . அங்கே சிதறிக் கிடந்த கற்களைத் தனது சட்டைத் துணியில் பொறுக்கி எடுத்துப் போட்டுக் கொண்டு மறியல் செய்பவர்களை நோக்கி விரைந்தான் . கற்களை , அவர்களிடம் கொடுத்தான் . இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்தபோது , அதைக் கவனித்த போலீஸ்காரர் ஒருவர் வேகமாக ஓடிவந்து அவனது குடுமியைப் பிடித்து கள்ளுக்கடைக்குள் இழுத்துச் சென்றார் . ஈவிரக்கமின்றித் தடியால் அடித்தார் . இதைக் கண்ட கூட்டத்தினர் ஆவேசமாகக் கள்ளுக்கடைக்குள் நுழைந்து மாயாண்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர் . - 1931 - ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டம் பேரெழுச்சி பெற்றிருந்த காலத்தில் காந்திஜியின் கட்டளைப்படி நாடு முழுவதும் கள்ளுக்கடை மறியல் தொடர்ந்து நடைபெற்றது . காங்கிரஸ் தொண்டர்கள் கள்ளுக்கடைக்கு முன்பு நின்று அதற்குள் செல்வோரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு , போகவேண்டாமெனக் கெஞ்சுவார்கள் ;

பல இடங்களில் தொண்டர்களுக்கு அடி விழும் . சில குடிகாரர்கள் அவர்கள் மீது எச்சிலைக் காறித் துப்புவார்கள் ; போலீஸ் தடியடியும் நடக்கும் . தொண்டர்கள் இவற்றை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது காந்திஜியின் கட்டளை . சில இடங்களில் கள்ளுக்கடைக்காரர்களின் தாக்குதல் காரணமாக அந்த மறியலைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள் திருப்பி அடிப்பார்கள் ; - இதுதான் அன்றும் நிகழ்ந்து கொண்டிருந்தது . வன்முறை அதிகரித்தது . கள்ளுக்கடைக்கு நெருப்பு வைக்கப்பட்டது . போலீசார் ஏராளமான எண்ணிக்கையில் வரவழைக்கப்பட்டனர் . நிலைமை கட்டுக்கடங்காமல் போகத் துவங்கியது ; போலீசார் ஆவேசமாகத் தடியடிப் பிரயோகம் நடத்த ஆரம்பித்தனர் . மக்கள் கூட்டம் செய்வதறியாமல் கள்ளுக்கடைக்குப் பின்புறம் உள்ள வைகை ஆற்றை நோக்கி ஓடியது . தொடர்ந்து வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் . சிலர் மடிந்தனர் . இரத்தக் காயங்களுடன் பலர் துடித்தனர் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் , மாயாண்டி உடல் முழுதும் காயங்களுடன் தள்ளாடிக்கொண்டே தன் வீட்டை வந்தடைந்தான் . வீட்டின் பின்புறமாக வீட்டிற்குள் நுழைந்தான் .

இருப்பினும் தந்தையாரின் கழுகுப் பார்வையிலிருந்து அவனால் தப்ப இயலவில்லை . அருகில் வந்து குடுமியைப் பிடித்துக் கொண்டு நடந்த விஷயம் பற்றிக் கேட்டார் . மாயாண்டி தயங்கித் தயங்கி உண்மையைச் சொல்லி முடிக்குமுன்பே சரமாரியாக அடி விழுந்தது ; வலி பொறுக்கமுடியாமல் கதறிக் கதறி அழுத மகனது அழுகுரலைக் கேட்டு வந்த தாயார் , குறுக்கே புகுந்து அவனை வீட்டிற்குள் வேகமாக இழுத்துச் சென்றுவிட்டார் . மகனது துயர் கண்டு அவரது கண்களில் நீர் துளிர்த்தது . அவனைப் படுக்க வைத்துக் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்தார் . வேதனையில் முனகும் அவனிடம் மிகவும் கெஞ்சும் குரலில் " இவையெல்லாம் நமக்குத் தேவையில்லை ; இனி அத்தகைய இடங்களுக்குச் செல்லக் கூடாது " என்று கேட்டுக்கொண்டார் . ஆனால் மாயாண்டியின் மௌனம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ! எவ்விதச் சலனமுமில்லாமல் மிகுந்த மனஉறுதியுடன் தன்னை உற்றுநோக்கிக் கொண்டிருந்த மாயாண்டியைப் பார்த்த தாயின் கண்களில் நீர் பெருகியது .

மாயாண்டியின் தகப்பனாரான இருளப்ப ஆச்சாரியார் நீதிக்கட்சியின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் . - - நீதிக்கட்சி என்ற அந்தக் கட்சியின் தலைவர்களில் , தலைசிறந்து விளங்கிய சர் . பி . டி . ராஜனின் பக்தர் ஆகத் திகழ்ந்தார் . நாட்டு விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியை வெறுத்தார் . காங்கிரஸ் என்றாலே அவருக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது . ஆனால் அவரது குடும்பத்திலோ நிலைமை வேறு விதமாக இருந்தது . மாயாண்டியும் அவரது மூத்த சகோதரர் கருப்பையாவும் காங்கிரஸ் கட்சியில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தனர் . ஏற்கனவே கூறியதுபோல் , " உறங்கா நகரம் " என்று பெயர் பெற்ற மதுரை நகரம் அரசியலிலும் உறங்கா நகரமாகவே சிறப்புற்று விளங்கியது . தேசிய அளவில் ஏற்படுகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியின் பிரதிபலிப்பும் மதுரையில் உடனே ஏற்படும் . “ மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் " என்று ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காரர்களைப் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடுவார்கள் . ஒருவகையில் பார்த்தால் அது உண்மையாகவே காணப்படுகிறது என்பது வரலாற்றால் புலனாகிறது . 

சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங்கும் அவரது சக தோழர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்ட செய்தி மதுரையில் பரவியதும் மதுரை நகரமே கொந்தளிக்கத் துவங்கியது . கடைகள் அடைக்கப்பட்டன . அரசாங்கத்தின் அடக்குமுறை , தலை விரித்தாடும் அராஜகம் , வெள்ளை ஏகாதிபத்திய ஆதிக்க வெறி , முதலியவற்றைக் கண்டித்து ஆக்ரோஷமான முறையில் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு மிக அவேசமாக ஊர்வலம் நடத்தப்பட்டது . கால வெள்ளத்தில் , தந்தைக்கு எதிராக நீச்சல் அடித்துக் கொண்டிருந்த மாயாண்டியும் அவரது மூத்த சகோதரர் கருப்பையாவும் , கடலலையாய்ப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த அந்த ஊர்வலத்தில் , பங்கேற்றனர் .

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழுமூச்சாகக் கோஷங்களை எழுப்பினர் . நேரம் செல்லச் செல்ல பங்கேற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது ; ஊர்வலம் மிகப்பிரம்மாண்டமான பேரணியாக மாறியது . நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடுமென்று அஞ்சிய வெள்ளையர் , ஊர்வலத்தினர் கலைந்து போகவேண்டுமென்று ஒலிபெருக்கிகளில் எச்சரிக்கை செய்தனர் . ஊர்வலத்தினர் அதைப் பொருட்படுத்தவில்லை . தமது எச்சரிக்கை " செவிடன் காதில் ஊதிய சங்கு போல் " ஆகிவிட்டதை உணர்ந்த வெள்ளை அதிகாரத்தினர் வானை நோக்கிப் படபடவெனச் சுட்டனர் . இந்நிலையில் கூட்டத்தினர் போலீசார் மீது கல்லெறியத் துவங்கினார்கள் . கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது . போலீசார் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தத் துவங்கினார்கள் . கூட்டத்தில் சிக்குண்ட கருப்பையாவிற்கும் மாயாண்டிக்கும் காயம் ஏற்பட்டு விட்டது . மாயாண்டியும் கருப்பையாவும் மிகப்பெரிய சாதனையைச் செய்து விட்ட மனநிலையில் வீடு திரும்பினர் .

காங்கிரஸ் என்றாலே வெறுப்புக் கொண்டிருந்த இருளப்ப ஆச்சாரியார் . தம் மகன் காங்கிரஸ் ஊர்வலத்தில் பங்கேற்று , காயத்துடன் வீடு திரும்பியதைக் கண்டு வெகுண்டார் . தனது வெறுப்பையெல்லாம் ஒன்று கூட்டி கருப்பையாவை நையப்புடைத்தார் . “ காங்கிரஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கக் கூடாது " என்று மிகக் கடுமையாக மிரட்டி எச்சரிக்கை செய்தார் ஆனால் கருப்பையாவோ , நாட்டு விடுதலைக்காகப் பாடுபடும் காங்கிரசுக்காகத் தான் பாடுபடுவதில் தவறில்லை என்று தந்தையிடம் பணிவாக , ஆனால் உறுதியாகத் தெரிவித்தார் . அண்ணன் கருப்பையாவின் வார்த்தைகள் மாயாண்டியின் மனத்திரையில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது . அண்ணன் கூறும் வழியே அறவழி என்பது அவனது ஆழ்ந்த சிந்தனையில் நிலைத்து விட்டது. அதன் விளைவாக காங்கிரஸ் கூட்டங்களுக்குத் தன் தகப்பனாருக்குத் தெரியாமல் போய்க் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் பேச்சைக் கேட்பது நண்பர்களை அழைத்துக் கொண்டு ஊர்வலங்களுக்குப் போவது காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றால் அதன் விபரத்தைத் தன் அப்பாவிற்குத் தெரியாமல் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்களுக்கு ரகசியமாகத் தெரிவித்து அவர்களை அவசியம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கச்செய்வது போன்ற செயல்களில் ஈடுபடலானார் .

எதிர்பாராத வகையில் தகப்பனாருக்கு இந்த விவரம் தெரிய வந்தால் அன்றிரவு வீடு திரும்பியதும் அடி விழும் . நாட்கள் செல்லச் செல்ல இதையும் தாங்கிக்கொள்ளும் மனநிலைக்குத் தன்னைத் தானே பக்குவப்படுத்திக் கொண்ட மாயாண்டி தொடர்ந்து தனது செயல்களில் ஆர்வம் காட்டி வந்தார் . இந்நிலையில் ஒருநாள் மதுரைச் சம்மட்டிபுரத்தில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்றது . ஏறத்தாழ இரவு 8 மணியளவில் , காங்கிரஸ் தொண்டர்கள் , கையில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்துக்கொண்டு , கள்ளுக்கடைக்குப் போவோர் காலில் விழுந்து வணங்கி , கள்ளுக்கடைக்குப் போகாமலிருக்கவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தனர் . தொண்டர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டுப் பலரும் கள்ளுக்கடைக்குள் சென்று கொண்டிருந்தனர் . ஒருசிலரே மனம் இரங்கித் திரும்பிச் சென்றனர் . அப்போது தூரத்தில் ஒரு கார் வந்துகொண்டிருந்தது .

மறியல் போராட்டத்திற்குத் தலைமையேற்கும் வைத்தியநாத ஐயர் அந்தக் காரில் வருவதாக அனைவரும் நினைத்தனர் . உடனே " வைத்தியநாத ஐயர் வாழ்க ; ஆங்கில ஏகாதிபத்தியம் ஒழிக " என்று அனைவரும் கோஷம் எழுப்பினர் . கார் அருகில் வந்து நின்ற பிறகு தான் அது போலீஸ் வண்டி என்பதும் வைத்தியநாதர் கார் அல்ல என்பதும் தெரிந்தது . வேகமாக வந்து வெளியே குதித்த போலிசார் மறியல் செய்து கொண்டிருந்தவர்களையும் , கோஷம் போட்டுக்கொண்டு நின்றிருந்த பார்வையாளர்களையும் தடியால் முரட்டுத்தனமாகத் தாக்கினார்கள் மாயாண்டிக்கு முதுகில் அடி விழுந்தது வேதனை பொறுக்காமல் சகதியில் விழுந்துவிட்ட மாயாண்டியைச் சிலர் மிதித்துக் கொண்டு ஓடினார்கள் . கூட்டம் கலைத்து ஓடியது . குடிகாரர்கள் நிம்மதியாகக் கள் குடித்தார்கள் . போலீசாரும் போய் விட்டனர் . ரத்தக்கறை படிந்த சட்டையுடனும் , உடலில் பல இடங்களில் வீக்கத்துடனும் இரவில் வீடு திரும்பிய மாயாண்டிக்குப் பலமான அடி உதையுடன் கூடிய வழக்கமான வரவேற்புக் கிடைத்தது . பிறகு அடி உதைகளால் பயன் ஏற்படவில்லை என்று தெரிந்து கொண்ட இருளப்ப ஆச்சாரியார் , தமது மகனின் துயர் கண்டு ஆதங்கப்பட்டார் . தமது செயலை நியாயப்படுத்திப் பேசினார் . " டேய் ! உனக்கு வெள்ளைக்காரனைப் பத்தி என்னடா தெரியும் ? வெள்ளைக்காரன் ரொம்ப நியாயமானவன் ; எல்லோருக்கும் நியாயம் செய்வான் ; லஞ்சம் வாங்கமாட்டான் ; படிப்புக்கு மரியாதை கொடுப்பான் . பாரபட்சம் கிடையாது . ரொம்பக் கட்டுப்பாடானவன் . துப்பாக்கி வச்சிருக்காண்டா . குருவியச் சுடற மாதிரி சுட்டுப் பொசுக்கிடுவாண்டா டேய் காந்தி , நேரு இவங்களப் பத்தி உனக்குத் தெரியுமாடா ? அவங்களெல்லாம் கோடீசுவரன் வீட்டுப் பிள்ளைகள்டா . அவங்களையே கம்பி எண்ண வச்சிட்டாண்டா ! நீ எல்லாம் எந்த மூலைக்குடா ? ஒன்னோட வேலையுண்டு , நீ உண்டுன்னு இரு , வம்பா அடிபட்டுச் சாவாதே ; காங்கிரசும் வேணாம் ; ஒரு புண்ணாக்கும் வேணாம் ! முதுகுத் தோல உரிச்சுப்புடுவேன் உரிச்சி ! " என்றார் . அப்போது அழுது கொண்டே அங்கு வந்த அம்மா , மகனை வீட்டிற்குள் இழுத்துப் போய் ஒத்தடம் கொடுக்கலானார் .

இருளப்ப ஆச்சாரியார் இன்னும் சீறிக்கொண்டே இருந்தார் . ஆனால் இவையெல்லாம் மாயாண்டியின் மனதில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை . பள்ளி மாணவனாக இருந்த மாயாண்டியின் காங்கிரஸ் தாகம் பெரிய தலைவர்களைக் கவர்ந்தது . ஆகவே காங்கிரஸ் தியாகி திரு . என் . எம் . ஆர் . சுப்புராமன் அவர்கள் மாயாண்டியை சௌராஷ்டிரா மேனிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பில் சிபாரிசு செய்து சேர்த்தார் . மாயாண்டியின் வீட்டிற்குப் பின்புறம் உள்ள கறிவேப்பிலைக்காரத் தெருவில் ஒரு மண்டபம் இருந்தது . அதில் ஒரு வாசகசாலையும் இருந்தது . இந்த மண்டபம் காங்கிரஸ் ஊழியர்கள் சந்திக்கும் இடமாக இருந்தது . வங்காளக் காங்கிரஸ் தலைவராக இருந்த பி . சி . ராய் 1931ஆம் ஆண்டில் மதுரைக்கு வந்த போது இந்த மண்டபம் திறந்து வைக்கப்பட்டது . அதற்கு லஜபதி நிலையம் " என்று லாலா லஜபதிராய் நினைவால் பெயரிடப்பட்டது . அந்த மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் நெருங்கிய கூட்டாளியும் , அரசியல் கைதிகளின் உரிமைக்காக அந்தமான் சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயர்நீத்த " யதீந்திரநாத் தாஸ் " என்பவரது பெயரால் ஒரு நூல் நிலையமும் செயல்பட்டு வந்தது . மதுரைக்கு வரும் பெரிய பெரிய காங்கிரஸ் தலைவர் அனைவரும் லஜபதி நிலையத்திற்குத் தவறாமல் வருகை புரிவார்கள் .

சுதந்திரப் போராட்ட உள்ளம் கொண்டவர் அனைவரும் அப்போது அங்கே கூடிவிடுவார்கள் . சர்தார் வல்லபாய் படேல் , பண்டித ஜவஹர்லால் நேரு போன்றோர் அங்கு வந்தனர் . அங்கு சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அடிக்கடி நிகழ்வுறும் இந்நிலையத்தின் பின்புறம் , மறியலில் அடிக்கப்படும் காங்கிரஸ் தொண்டர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் . அப்போது போலீசார் யாரேனும் வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க மாணவர்களும் , பெண்களும் உதவி செய்வார்கள் . வீட்டை விட்டு அதிகாலையில் புறப்பட்டு லஜபதி நிலையத்திற்குச் சென்றுவிட்டுப் பிறகு பள்ளி செல்வதும் , மாலையில் பள்ளி முடிந்ததும் மீண்டும் அங்கு சென்ற பின்பே வீடு திரும்புவதும் மாயாண்டிக்கு வழக்கமாகி விட்டது . அவ்வாறு செல்லும் போது பள்ளித் தோழர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர் . - லஜபதி நிலையத்திலமைந்திருந்த நூல் நிலையத்திற்கு நாள்தோறும் வந்து தேசியப் பத்திரிகைகள் , பிரசுரங்கள் போன்றவற்றைப் படிக்கும்போது அங்கு வரும் காங்கிரஸ் தலைவர்களின் அறிமுகமும் ஏற்பட்டது . பின்னாட்களில் மாயாண்டி சிறந்த தேசபக்தராவதற்குரிய அடித்தளம் இங்கே தான் அமைக்கப்பட்டது என்பது உண்மை .

 லஜபதி நிலையத்திற்கு வரும் காங்கிரஸ் பாடகர்கள் , சிறுவர்சிறுமியர்க்குப் பாரதியார் , நாமக்கல் கவிஞர் முதலிய பெரியோர்களின் தேசபக்திப் பாடல்களைக் கற்றுத் தருவது வழக்கம் . சுதந்திர வேட்கையில் தணியாத ஆர்வமுடைய மாயாண்டிக்கு இப்பாடல்கள் அனைத்தையும் பாடுமளவிற்கு மிகுந்த திறமை ஏற்பட்டது தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் சீடரான தியாகராஜ சிவம் , தேசியகவி பாரதியாரின் சீடரான ஸ்ரீநிவாச தேசிக அய்யங்கார் , அவரது துணைவியார் பத்மாசினி அம்மையார் , சிதம்பர பாரதி , தியாகராஜ சிவம் , பி . கே . நாராயணன் எழுத்தாளர் ரங்கராஜன் ஆகியோர் லஜபதி நிலையத்தில் அமைந்திருந்த யதீந்திரநாத் தாஸ் நூலகத்தின் புரவலராகத் திகழ்ந்திருந்தனர் . மாயாண்டியின் சுதந்திரப் பற்றும் ஆர்வமும் அவர்களை வியப்பும் மகிழ்ச்சியும் கொள்ளச் செய்தது .

அதுமட்டுமல்ல , மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பாரதியாரின் தேசீயப் பாடல்களை உணர்ச்சிபூர்வமாக அனுபவித்துப் பாடுவதைக் கண்ட அவர்கள் அன்று முதல் " மாயாண்டி பாரதி ' என்ற பெயரால் அவரை நாட்டிற்கு அறிமுகம் செய்தனர் . மாயாண்டி பாரதி பள்ளிப்பாடத்தையும் நன்கு படித்தார் . சுதந்திர இயக்கப் பிரச்சாரத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார் . காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குக் கூட்டமாகத் தொண்டர்களை அழைத்துச் செல்லுதல் , காங்கிரஸ் தலைவர் தயாரிக்கும் ரகசியச் சுற்றறிக்கைகளை நள்ளிரவில் பல பகுதிகளில் ஒட்டுதல் , அதிகாலை 5 மணியளவில் தெருவில் தகர டப்பாக்களைத் தட்டி மக்களை விழித்தெழச் செய்து அவர்களிடம் , தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தைத் தெரிவித்தல் , மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டிருந்தால் அதனைத் தண்டோரா மூலம் தெரிவித்தல் , காங்கிரஸ் கட்சி வெளியிடும் சட்ட விரோதத் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று விநியோகித்தல் முதலிய செயல்களில் எவரையும் விஞ்சும்வண்ணம் மாயாண்டி பாரதி வெற்றிகரமாக ஈடுபட்டார் .

1932ஆம் ஆண்டு ; அப்போது அவருக்குப் பதினைந்து வயதாகியிருந்தது ; நாடெங்கும் சட்ட மறுப்புப் போராட்டம் தீவிரமாகப் பரவியிருந்தது . காங்கிரஸ் தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட மாயாண்டி பாரதி இரவோடிரவாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் . தலைமறைவாக இருந்த சில காங்கிரஸ் தலைவர்களிடையே ரகசிய கருத்துப் பரிமாற்றக் கடிதங்களைக் கொண்டு சென்றார் . ரகசியத் திட்டம் வெற்றி பெற்றது . தலைமறைவாக இருந்த தலைவர்கள் வெளியே வந்தனர் . அனைவரும் சொல்லிவைத்தாற்போல் திடீரெனத் தல்லாகுளம் அருகே கூடினர் . "

வெள்ளையன் ஒழிக " கோஷம் விண்ணைப் பிளந்தது . எதிர்பாராதவண்ணம் பரபரப்பு ஏற்பட்டதால் மக்கள் சிறிது நேரத்தில் அங்கே திரண்டனர் . சட்ட மறுப்புப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டி விட்டது ; அப்போது செய்தியறிந்த போலீசார் மளமளவென்று லாரிகளில் வந்திறங்கினர் . அரசாங்கத்தை எதிர்த்துக் கோஷமிடுவது தவறு என்றும் உடனே கலைந்து போக வேண்டுமென்றும் உத்தரவிட்டனர் . கூட்டம் கலையவில்லை . ஆகவே மிருகத்தனமான தடியடித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டனர் . பொழுது சாய்ந்துவிட்ட நேரம் . கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறியோடினர் . உரத்த குரலில் கோஷமிட்டுக்கொண்டே ஓடிய மாயாண்டியின் தலையை " லாட்டி " பதம்பார்த்திருக்கும் . நல்ல வேளை ! கூட்டத்தினர் தள்ளிவிட்டு ஓடிய வேகத்தில் அவர் கீழே விழுந்தார் . முதுகில் அடி விழுந்தது . எழுவதற்குள் கூட்டத்தினர் சிலர் அவரை மிதித்துக்கொண்டு ஓடினர் . உடலில் சிராய்ப்புக் காயங்கள் . முதுகு வீங்கியிருந்தது ; தயங்கித் தயங்கி வீட்டிற்கு வந்தார் . இந்தமுறை தந்தை அவரை அடிக்கவில்லை ; அடி வாங்கி , அடி வாங்கி , மாயாண்டி மரத்துப்போயிருந்தார் . தற்போதைய சூழ்நிலையில் அடிகொடுத்து அடிகொடுத்து இருளப்ப ஆச்சாரியார் மரத்துவிட்டிருந்தார் . வெறுப்புடன் மகனைப் பார்த்துக் கொண்டே , " நான் உன்னை அடிக்கப்போவதில்லை .

வெள்ளைக்காரன் கையால் அடிபட்டுச் சாவணும்னு உன் தலைல எழுதியிருக்கு போலிருக்கு ; அதுதான் இப்படி நீ ஒவ்வொரு கூட்டமாய்ப் போய்ட்டு வந்து அடிவாங்கிட்டு வந்து நிக்கிற என்ன சொன்னாலும் கேட்டுத் தொலயமாட்டங்கிற " என்று மிகுந்த கோபத்துடன் கூறினார் . வழக்கம்போல் அன்னை வந்து ஆறுதல் கூறினார் . தொடர்ந்து 1932 ஆம் ஆண்டு அந்நியத்துணி எரிப்புப் போராட்டமும் , அன்னிய ஜவுளிக்கடை மறியல் போராட்டமும் நடைபெற்றது . போராட்டத்தில் பங்கேற்பவர் கூட்டமும் , போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த கூட்டமுமாகச் சேர்ந்து பெருங்கூட்டம் கூடியிருந்தது . காந்தியடிகளின் கட்டளையைச் சிரமேற்கொண்டு , அறவழியில் அன்னிய ஜவுளிக்கடை மறியல் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது அதன் விளைவாகக் கூட்டத்தை கலைப்பதற்காகப் போலீசார் தடியடிப் பிரயோகம் நடத்தவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது . கூட்டத்தினரை விரட்டிய போலீசார் கூட்ட நெரிசலில் கீழே விழுந்த மாயாண்டியை அடித்தனர் . ஆனால் சிறுவனாக இருந்த காரணத்தால் லேசான ஒரு அடியுடன் தப்ப முடிந்தது . இதற்கிடையில் மாயாண்டியின் முகம் போலீசுக்கு நன்கு அறிமுகமாகி விட்டது .

மாயாண்டி மீது கோபம் வரும் . ஆனால் சிறு வயது முதலே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக அனைவருக்கும் தெரிந்ததால் இரக்கத்தின் அடிப்படையில் லேசாக அடி விழும் . மொத்தத்தில் அன்றைய போராட்டம் மக்களிடையே புத்துணர்ச்சி ஊட்டிய ஒரு வெற்றிப் போராட்டமாகவே அமைந்திருந்தது . அதற்குப் பின் போராட்ட நிலையில் அங்கும் இங்குமாக நடந்த சிறுசிறு நிகழ்ச்சிகள் தவிர குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏதுமின்றி மெதுவாகவே காலம் சென்றுகொண்டிருந்தது . மாயாண்டி பாரதி வாலிபப் பருவம் எய்தினார் . இந்நிலையில் தாமே தனித்து நின்று சொற்பொழிவாற்றும் திறனையும் வளர்த்துக் கொண்டார் . ஒருமுறை பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது விருதுநகருக்கு அருகேயுள்ள ஒரு ஊரில் விடுதலைப் போராட்டச் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றிருந்தார் . இரவு சுமார் 8 மணி இருக்கும் . இரு புறமும் வெளிச்சத்திற்காக தீவட்டி ஏந்திய இருவர் நின்றிருக்க நடுவே நின்று மாயாண்டி , பாரதி சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார் . அனல் பொறி பறக்க இவர் பேசுவதை ஏறத்தாழ இருநூறு அல்லது முந்நூறு பேர் கேட்டுக்கொண்டிருந்தனர் . அவ்வூர் ஜமீன்தார் தமது வீட்டுத் திண்ணையருகே ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்திருந்தார் . அவருக்குப் பின்புறம் பண்ணையாட்கள் ஏழெட்டு பேர் நின்று கொண்டிருந்தனர் . ஆவேசமாகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த நமது தியாகியார் . சொற்பொழிவின் ஒரு கட்டத்தில் , " வெள்ளைக்காரர்களை இந்த நாட்டை விட்டு அடித்து விரட்டவேண்டும் , இங்கேயே இருந்துகொண்டு வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசிக் திரியும் நம் நாட்டவரையும் நாட்டை விட்டே துரத்தவேண்டும் என்று கூறினார் .

அப்போது திடீரென்று முரட்டுத்தனமான குரலொன்று ஒலித்தது " டேய் ; அவனப் பிடித்து அந்தத் தூண்ல கட்டுங்கடா என்ன திமிர் இருந்தா இவன் இப்படிப் பேசுவான் ? " ஜமீன்தாரின் குரல் தான் அது அவ்வளவு தான் ! ஜமீன்தாருக்குப் பின்புறம் நின்று கொண்டிருந்த அந்த ஏழெட்டுப் பேரும் ஓடிவந்தனர் . மாயாண்டி பாரதியைப் பிடித்து அங்கிருந்த தூணில் கட்டி வைத்து விட்டனர் . தூணில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ; கட்டுக்களை அவிழ்த்துவிட யாரும் வரவுமில்லை . கூட்டத்தில் மயான அமைதி நிலவியது ; ஜமீன்தாரை எதிர்க்க யாருக்கும் துணிவு வரவில்லை . கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென்று ஊரின் ஓரத்தில் இருந்த ஜமீன்தாருக்குச் சொந்தமான வைக்கோற்படப்பு கபகபவென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது . ஜமீன்தாரும் , அவரது அடியாட்களும் , பொதுமக்களும் மிக வேகமாகத் தீயை அணைப்பதற்காக ஓடினர் .

 அப்போது , எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது . திடீரென்று நான்கு பேர் வந்தனர் . அவசர அவசரமாகக் கட்டுக்களை அவிழ்த்தனர் . எதுவும் பேசவேண்டாம் என்று சைகையால் தெரிவித்து விட்டு , இருட்டில் சுமார் 3 கி . மீ . தூரம் வேகவேகமாக ஓட்டமும் நடையுமாக அவரை இழுத்துக்கொண்டு சென்றனர் . விருதுநகரிலிருந்து மதுரை செல்லும் சாலையை வந்தடைந்ததும் இருட்டில் ஒரு மரத்தடியில் நின்றனர் . அப்போது அந்த வழியாக ஒரு மாட்டுவண்டி வந்தது . இரவு சுமார் 10 மணி இருக்கும் . அவசர அவசரமாக அந்த மாட்டுவண்டியில் , அவரைப் பத்திரமாக ஊர் போய்ச் சேருமாறு சொல்லி அனுப்பி வைத்து விட்டனர் . " தப்பித்தோம் . பிழைத்தோம் " என்று மறுநாள் அதிகாலை 6 மணியளவில் மாயாண்டி பாரதியார் மதுரை வந்து சேர்ந்தார் .

பிறகு தியாகி மாயாண்டி பாரதி , காங்கிரசின் பல மூத்த தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னைக்குத் தம் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார் . அங்கு சென்னை மாகாணத் தீவிர காங்கிரஸ் வாலிபர் சங்கத்தின் செயலாளராகத் திகழ்ந்தார். திரு . வி . க . வின் நவசக்தி , பரலி . சு . நெல்லையப்பரின் லோகோபகாரி தேசபக்தர் மகி திருவேங்கடத்தின் லோகசக்தி , பாரத சக்தி முதலிய பல பத்திரிகைகளில் நிருபராகவும் , துணை ஆசிரியராகவும் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது . 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் மூண்டது . தியாகி மாயாண்டி பாரதி அவர்கள் லோகசக்தி இதழிலும் பாரத சக்தி இதழிலும் தமிழக இளைஞர்கட்கு ஒரு போராட்ட அறைகூவல் விடுத்து , பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குச் சவால் விட்டார் . அப்போது காங்கிரஸ் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்னை வந்தார் .

திருவல்லிக்கேணியில் திலகர் கூட்டத்தில் அவரது ஆவேச உரை கேட்டு லோகசக்தியில் போருக்குத் தயார் " என்ற கட்டுரை தீட்டினார் . அதுமட்டுமல்லாமல் உடனே சுதந்திரம் கொடு " , " பற ! பற ! வேகமாய்ப் பற ! " என்ற கட்டுரைகளையும் தீட்டினார் . அத்துடன் நிற்கவில்லை ! " குருக்ஷேத்திரப்போர் ! ' ' " கொடி ஏறிவிட்டது " " அக்கினிக் குஞ்சுகளே " மற்றும் " கண்ணுக்குத் தெரியும் வானம் , கைக்குக் கிடைக்கும் நேரம் " என்ற கட்டுரைகளையும் தீட்டினார் . இந்தக் கட்டுரைகள் இளைஞர் சமுதாயத்திடையே மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது . ரகசியப் பிரிவு போலீசார் மூலம் செய்திகளை அறிந்த வெள்ளை அரசாங்கம் தியாகி மாயாண்டி பாரதிக்கு வலைவிரித்துக் காத்திருந்தது . இந்நிலையில் " படுகளத்தில் பாரததேவி " என்ற நூலினை நம் தியாகி அவர்கள் வெளியிட்டார் .

 காத்திருந்த வெள்ளை அரசாங்கம் இவரைக் கைது செய்தது . சென்னை மத்திய சிறையில் இவர் அடைத்து வைக்கப்பட்டார் . ஆட்சியாளர்க்கெதிரான போரட்டம் ஏற்படக் காரணமாக இருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து விடுவிக்கப்பட்டார் . - தொடர்ந்து வெள்ளை அரசாங்கத்தினரால் தியாகி மாயாண்டி அவர்கள் " கரும்புள்ளி " என்று முத்திரை பதிக்கப்பட்டு விட்டார் . 1940ல் தியாகி அவர்கள் உலகப்போர் நிகழ்வுற்ற போது யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார் . அது , ஆட்சியாளர்க்கு எதிரான பிரச்சாரம் என்று கருதிய வெள்ளையரசாங்கம் அவரைக் கைது செய்தது , விளைவு ? 9 மாதங்கள் தண்டனை வழங்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் . 1941ஆம் ஆண்டு விடுதலை பெற்றார் ; தியாகி வெளியில் இருந்தாலே தலைவலிதான் என்று நினைத்த வெள்ளை அரசு இவர் விடுதலை பெற்ற நாளன்று , சிறைவாசலிலேயே மீண்டும் கைது செய்தது . ஒன்றரை ஆண்டுகள் பாதுகாப்புக் கைதியாக சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது .

1942ஆம் ஆண்டு ஜூலை மாதம் விடுதலை பெற்றார் அப்போது காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு " என்ற போராட்டம் உச்சிநிலை அடைந்திருந்தது . ஏற்கனவே ஊர்வலங்கள் , போராட்டங்கள் ஆகியவற்றில் நல்ல பயிற்சியும் மனஉறுதியும் எழுச்சியும் பெற்றிருந்த தியாகி மாயாண்டி பாரதி அவர்கள் சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்குத் தலைமையேற்று அதனை வெற்றிகரமாகவும் , மிகச்சிறப்பாகவும் நடைபெறச் செய்தார் . | தியாகி ஐ . மாபா . அவர்களைக் குறி வைத்திருந்த வெள்ளையர்கள் அவரைக் கைது செய்தனர் . பாதுகாப்புக் கைதி என்ற பெயரால் சிறையில் அடைத்தனர் . 1942 , 1943 , 1944 ஆகிய ஆண்டுகளில் அவர் தமது வாழ்க்கையைச் சிறைச்சாலையின் மிகச்சிறிய அறைகளிலேயே தியாக உணர்வுடன் கழிக்க நேர்ந்தது .

 தியாகி ஐ . மாபா . அவர்கள் , தமது சுதந்திரப் போராட்டக் காலங்களில் காமராசர் , பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் , முன்னாள் ஜனாதிபதி நீலம் சஞ்சீவிரெட்டி . ஆர் . வெங்கட்ராமன் , சென்னை சட்டசபை சபாநாயகராகத் திகழ்ந்த புதுவை சாம்பமூர்த்தி , பட்டாபி சீத்தாராமய்யா , என் . எம் . ஆர் . சுப்புராமன் , காரைக்குடி தியாகி சா . கணேசன் , சர்தார் வேதரத்னம் பிள்ளை , கோவை டி . எஸ் . அவிநாசிலிங்கம் ரெட்டியார் , ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் , ம . பொ . சிவஞானம் , ஆர் . உமாநாத் , ஜீவானந்தம் , பி . இராமமூர்த்தி , மோகன் குமாரமங்கலம் , கே . பாலதண்டாயுதம் , ஏகே . கோபாலன் , என்ஜி . ரங்கா , பிபி . சித்தன் , அனந்த நம்பியார் , கேடிகே தங்கமணி , ஆர் . நல்லகண்ணு , ஏ . எஸ் . கே . அய்யங்கார் , என் . சங்கரய்யா , தூத்துக்கடி வீரபாகு பிள்ளை முதலியோருடன் பல்வேறு சிறைகளில் பல ஆண்டுகள் சிறைவாசம் புரிந்த நிலை மறக்கற்பாலதன்று . இந்தியா விடுதலை பெற்றதும் , இவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் . போராட்டங்களைச் சந்திப்பதே வாழ்க்கையாக அமைத்துக் கொண்ட ஐ . மாபா அவர்கள் 1953 ஆம் ஆண்டில் எட்டையபுரத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார் . மொத்தத்தில் தியாகி ஐ . மா . பா அவர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் , பத்திரிகையாளர் , நகைச்சுவைப் பேச்சாளர் என்பது உறுதியாகப்புலனாகிறது .

தற்போது 87 வயது நிரம்பப் பெற்ற தியாகி மாயாண்டி பாரதி அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சமிதித் தலைவராகவும் திகழ்வது இங்கே குறிப்பிடத்தக்கது . முகத்தில் உறுதியுடனும் , கண்களில் தீட்சண்யத்துடனும் மதுரை மாநகர் மேலமாசிவீதியில் கம்பீரமாக உலா வந்து கொண்டிருக்கும் தியாகி ஐ . மாபா . அவர்கள் , " எனது 75 ஆண்டுப் பொது வாழ்வில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் , நூற்றுக்கணக்கான நகர , பட்டி தொட்டிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்துள்ளேன் ஆயிரக்கணக்கான திருமண விழாக்களில் கலந்துகொண்டு எனது தத்துவக் கருத்துக்களைப் பரப்பியுள்ளேன் . இப்பணியை இப்பொழுதும் தொடர்ந்து செய்து வருகிறேன் . I எனது 75 வருடப் பொது வாழ்வில் சொத்து சேர்த்ததுமில்லை , பட்டம் பதவிகளைப் பற்றிச் சிந்தித்ததுமில்லை " என்று கூறியபோது அவர் நம் கண்முன்னே , விஸ்வரூபமெடுத்த மாயாண்டி ( மாயக்கண்ணன் ) , ஆகவே தோற்றமளிப்பதாக நாம் உணர்கிறோம் !

" ஐந்தொழிலின்றேல் உலகமே இயங்காது ; ஆகவே ஐந்தொழிலின் அருமை பெருமைகளைக் கல்வியின் வாயிலாக விஸ்வகர்ம சமுதாயம் முதலில் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் . அதன் மூலம் அனைத்துச் சமுதாயத்தினரும் ஐந்தொழிலின் அருமையினையும் , ஐந்தொழிலாளர் பெருமையினையும் உணரும்வண்ணம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் " என்று தியாகி ஐ . மா . பா . அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தீர்க்கமான சிந்தனைக்குரியவையல்லவா ! விடுதலை வேட்கையும் , தியாக உணர்வும் , பொதுவுடைமை ஈர்ப்பும் உடைய தியாகி மாயாண்டி பாரதி அவர்கள் மதுரை , திருச்சி , வேலூர் , கோவை , சென்னை , பாளையங்கோட்டை கடலூர் , தூத்துக்குடி , கொக்கிரகுளம் , ஸ்ரீவில்லிபுத்தரர் . தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள பதினோரு சிறைகளில் மொத்தம் பதின்மூன்று ஆண்டுகள் சிறைவாசம் புரிந்தவர் . பட்டம் பதவி பற்றிச் சிந்திக்காமல் பொது வாழ்வில் சொத்து சேர்க்காமல் 87 வயதை எட்டிப் பிடித்து மதுரையில் வாழும் இவருக்கு ஈடாகக் கூறத் தக்க தியாகிகள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே இருப்பர் என்றால் அது மிகையாகாது !

Tuesday, 11 February 2020

விஸ்வகர்ம தமிழக ஸ்தபதிகள்



இவர்கள்தான் நமது பாரம்பரிய காவலர்கள்.
இவர்களின் திறமையால்தான்
நமது கலாச்சாரம் மாண்பு
காக்கப்படுகிறது.

இவர்களால்தான் இன்னமும்
தமிழ்சமுதாயம் நெஞ்சை நிமிர்த்தி
காலரை தூக்கிவிட்டு இருமாப்போடு
இருக்கிறது.

நூலோர்ச் சிறப்பின் முகில்தோய் மாடம், மயன் பண்டிழைத்த மரபினது தான்” என்னும் இலக்கிய அடிகள் அக்காலத்தில் சிற்பநூல்களும், சிற்பிகளும் இருந்தனர் என்பதனைத் தெரிவிக்கின்றன.

சுடுமண்ணால் எடுப்பிக்கப்படும் கோயிலை மண்தளி என்றும், கல்லால் கட்டப்படும் கோயிலைக் கற்றளி என்று அழைக்கிறோம்.

பல்லவர் காலக் கோயில் கட்டட அமைப்பு முறையைக் குடைவரைக்கோயில்கள் ஒற்றைக்கற்கோயில்கள் கட்டுமானக் கோயில்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

மலைகள் சார்ந்த இடங்களில் குடைவரை மற்றும் ஒற்றைக் கற்கோயில்களை எழுப்புவது எளிதாயிற்று.

மலைகளே இல்லாத இடங்களில் கற்களைச் செதுக்கிக் கட்டுவித்த கோயில்களை எடுப்பித்துக் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் பெருமை சேர்த்தனர் சோழர்காலப் பெருந்தச்சர்கள்.

தமிழ்நாட்டில் பண்டைக்காலம் தொட்டு ஓர் இனம் ஐந்து அடிப்படைத் தொழில்களைச் செய்து தமிழ் நாகரிகத்திற்கும், பண்பாட்டுக்கும் அரும்பெரும் தொண்டாற்றி வந்திருக்கிறது.

அவ்வினத்தைக் கம்மியர், கம்மர், கம்மாளர், விசுவகர்மா என்றும் மக்கள் கூறுவர். இலக்கியங்கள் கம்மர், கம்மியர், கைவினைஞர் என்றும் பேசும்

சங்க இலக்கியங்கள் சிற்பிகளை நூலறிபுலவர் எனக்கூறும். நூலறிபுலவர் என்பவர் கட்டடக்கலைஞர். மனைக்கட்டிடங்களோடு கோயில்களையும் வழிபடு படிமங்களையும் செய்வோர் தெய்வத்தச்சர் என்றும் அழைக்கப்பட்டனர்.

நூலறிபுலவர் என்பவர் கலைஞராவார். இவர்களையே பெருந்தச்சர் என இலக்கியங்களும் கோயிற் கல்வெட்டுகளும் குறிபிடுகின்றன

தொடக்க சோழர் காலத்தில் மண் தளிகள் கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்ட செய்திகளைப் பல கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. மரத்திலே செய்து அனுபவப்பட்ட காரணத்தினால் அனுபவப்பட்ட அமைப்பையே செங்கல்லிலும், கருங்கல்லிலும் ஸ்தபதிகள் வடிவமைத்தார்கள். கையாண்ட பொருள் மாறுபடினும் செய்வோன் பெயர் மாறுபடவில்லை என்பது நோக்கத்தக்கது.

மானசாரம் என்ற சிற்பநூல் சிற்பிகளின் தகுதிகள்,குணநலன்கள் முதலானவற்றை வரையறுத்துக் கூறுகிறது.

ஸ்தபதிக்கு அத்தனைத் தகுதிகளும் தேவையெனக் கூறக் காரணம், அவன் தம் பணியின் உயர்வை உணர்ந்து செயலாற்றச் சீரிய பண்பும், ஒழுக்கமும், தகுதியும் பெற்று விளங்குதல் வேண்டும் என்பதேயாகும்.

நுண்ணறிவும், கற்பனைத் திறனும் சிறக்க அமையப்பெற்றவனே சிறந்த ஸ்தபதியாவான்.

தஞ்சைப் பெரியகோயிலை நிர்மாணித்தவர் வீரசோழன் குஞ்சரமல்ல இராஜராஜப் பெருந்தச்சன் என்றும்

உத்திரமேரூர் விமானத்தை நிர்மாணித்தவர் பரமேஸ்வரப் பெருந்தச்சன் என்றும்,

மாமல்லபுரம் சின்னங்களைச் செதுக்கியவன் கேவாதப் பெருந்தச்சன் என்றும் கல்வெட்டுச் செய்திகளால் அறிகிறோம்.

மகேந்திர வர்ம பல்லவனின் ஸ்தபதி
சிற்பி அக்ஷரா என்பவராவார்.

பெருந்தச்சர்களே இன்றைய நாளில் ஸ்தபதி என அழைக்கப்படுகிறார்கள். ஒரு பிரதிமையைச் சமநிலையில் ஸ்தாபனம் செய்யத் தேர்ச்சி பெற்றவனே ஸ்தபதி எனப்படுகிறான்.

நிர்மாணப் பணிகளுக்கு ஸ்தபதி அதிபதியாகி இவரின் கீழ் சூத்ரகிராகி, வர்த்தகி, தச்சகன் எனச் சேர்ந்து குழுவாகச் செயல்படுவார்கள்.

ஸ்தபதி என்பவர் சிற்ப வல்லுநர்களின் தலைவனாகவும் ஆசானாகவும் கருதப்படுகிறான்.

சில கோயில்களில் அக்கோயிலைக் கட்டிய சிற்பியின் உருவத்தை அமைத்துப் பெருமை சேர்த்துள்ளனர் அக்கால அரசர்கள். தஞ்சை மாவட்டத்திலுள்ள கோனேரிராசபுரம் கோயிலில் அக்கற்றளியைச் செய்தவனின் உருவமும், அவன் பெயரும் கருவறையின் சுவரில் இடம்பெறச் செய்துள்ளனர். (13) இக்கோயிலைக் கட்டிய சிற்பிக்கு இராசகேசரி மூவேந்த வேளான் என்ற பட்டத்தை அளித்த பெருமையைப் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைகிறது.

சிதம்பரம் கோயிலின் வடக்குக் கோபுரத்தைக் கிருட்டிணதேவராயன் கட்டுவித்தார். அக்கோபுரத்தின் நுழைவு வாயிலின் பக்கச் சுவரில் நான்கு சிற்பிகளின் உருவங்களைக் காணலாம். அவ்வுருவத்திற்கு மேலே அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

Friday, 7 February 2020

மாதோட்டம்

இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த நகரமாகக் கருதப் படுகின்றது.
இலங்கையின் வடமேற்குப் பகுதியாகிய மன்னார் மாவட் டத்தில் பல கிராமங்களடங்கிய ஒருபகுதியை இன்றும் “மாந்தைப் பற்று" என்ற அழகிய தமிழ்ப் பெயராலே அழைக்கப்படுகின்றது. மாந்தை என்னும் பெயர் சங்ககால இலக்கியங்களிலும் மிக முக்கியமாகப் பதியப்பட்டுள்ளது.
மாந்தை அல்லது மாதோட்டம் என்னும் நகர் கம்மாளரால் கட்டப்பட்ட நகராகும். மிகப்பலம் பொருந்திய இச்சாதியார் பன்னெடுங்காலமாகப் இப்பகுதியை ஆட்சி செய்தார்கள் என ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த பற்றலொக்கி தானெழுதிய “இலங்கை” என்னும் நூலில் கூறியுள்ளார்.
“கொள்ளா நரம்பினிமிரும் பூசல் இரைதேர் நாரை  யெய்திய விடுக்கும் துறைஎகழு மாந்தை யன்ன”
என நற்றிணையும்,
"நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார் பணிதிரை கொணர்ந்த பாடு சேர் நன்கலம்" என அகநானூற்றிலும்,
“வண்டு பண்செய்யும் மாமலர் பொழில் மஞ்சை நடமிடும் மாதோட்டம்" எனச் சம்பந்தரும்,
"வாழையாம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம்"
எனவும்,
“பொன்னிலங்கிய முத்து மாமணிகளும் பொருந்திய மாதோட்டம்”
எனவும்,
"மானமும் பூகமும் கதலியும் நெருங்கிய
மாதோட்டம் நன்னகர்"
எனத் தேவாரங்களும் புகழ்ந்து பாராட்டிய நகர் மாதோட்ட நகராகும்.
இந்த மாதோட்ட நகரை, இலங்கையை வடிவமைத்த படைத்தல் கடவுளான விஸ்வகர்மாவின் மூன்றாவது மகனான துவட்டாச் சாரியாரே உருவாக்கினார். இவர் சிறந்த கட்டிடக் கலைஞர் திரிகாலமும் உணர்ந்த ஞானி. உலோகங்களை உருக்கி உருவங்களைச் செய்யும் ஆற்றல்மிக்கவர் ஆயகலைகள் அறுபத்தினான்கிற்கும் அதிபதி. விஞ்ஞான விற்பன்னர். வித்தைகள் பலதில் வித்தகர். சகலகலாவல்லவர். இதனால் மனிதரில் மாணிக்கம் என மக்கள் அழைத்தார்கள். இதன் பெறுபேறாக “மாதுவட்டா” என்னும் பெயர் மக்களால் வழங்கப் பட்டது. இக்காரணத்தில் அவரால் உருவாக்கப்பட்ட பகுதியை மாதுவட்டாபுரம் எனப் பெயரிட்டு அழைத்தார்கள். இது காலப் போக்கில் மாதோட்டம் என மருவியது. என பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளைதான் எழுதிய இலங்கைத் தமிழர் வரலாற்றில் கூறியுள்ளார்.
ஈழநாட்டின் வரலாற்றை கூறும்பாளி நூல்களான மகாவம்சம், அதன் பின் தோன்றிய சூளவம்சம் போன்ற நூல்கள் மாதோட் டத்தை மகாதித்த என்று குறிப்பிட்டுள்ளன. மா என்றால் பெரிய என்றும் தித்த என்றால் பாளி மொழியில் இறங்குதுறையைக் குறிக்கும். சிங்கள மொழியில் "மாதொட்ட", "மான் தொட்ட" என்று அழைக்கப்படுகின்றது. சிங்கள இலக்கியங்கள் இதனை “மாவத்து தொட்ட” என அழைக்கின்றன. ஆனால் தமிழரும்
தமிழ் இலக்கியங்களும் “மாதோட்டம்” என்றே அழைத்து வருகின்றன.
கந்தபுராணத்திலுள்ள தகூரிணகைலாய மான்மியத்தில் இது மாதுவட்டாபுரம் எனக் கூறப்படுகின்றது. இது சம்மந்தமாக தட்சண கைலாய புராணத்தில் ஒருகதை கூறப்படுகின்றது. "அதாவது துவட்டாரச்சாரியார் பாலாவியில் நீராடி கேதீச்சுவரை பூசித்து தவமியற்றினார் என்றும் நீண்டநாள் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தோன்றி இன்று முதல் இத்தலம் "துவட்டாபுரம்" என அழைக்கப்படும் என கூறியதாக அக்கதை தொடர்கின்றது.
இவ்வாறு பல பெயர்களால் அழைக்கப்பட்ட மாதோட்டத்தின் தோற்றத்தைப் பற்றிக் கூறும் சான்றுகளாக, தட்சணகைலாய புராணமும் மாந்தைப் பள்ளும், முதலியார் சி. இராசநாயகம் எழுதிய "புராதன யாழ்ப்பாணமும் விஸ்வபுராணமும் கதிரை மலைப்பள்ளும்" இப்பொழுது காணப்படுகின்றன.
மாதோட்டத்தில் படைத்தல் கடவுள் விஸ்வகர்மாவின் சந்த தியிரான ஐவகைக் கம்மளார்கள் வாழ்ந்தார்கள் என்றும் மாந்தையை ஆண்ட அரசர்கள் கம்மாள வம்சத்தவர்கள் என்றும் முதலியார் சி.இராசநாயகம் தாம் எழுதிய"புராதன யாழ்ப்பாணம்” என்னும் நூலில் கூறியுள்ளார். அதையே தட்சண கைலாய புராணமும், மாந்தைப் பள்ளும், விஜயதர்ம நாடகம் என்னும் நூல்களும் கூறுகின்றன.
மாதோட்டம் பற்றிய மிகமிகப் பழைய குறிப்பு மகாவம்சத்தில் காணப்படுகிறது. அதாவது விஜயன் இலங்கை வந்து குவேனி யைத் திருமணம் செய்து அவளின் உதவியோடு காளிசேனன் என்னும் மன்னனைக் கொலை செய்து, அவனின் சிற்றரசையும் தன்னாட்சியுடன் இணைத்தவுடன் குவேனியைக் காட்டுக்குத் துரத்திவிட்டு பின் தனக்குப் பட்டத்து அரசியாக பாண்டிய நாட்டு இளவரசியை வரவழைத்தபோது, பாண்டிய மன்னன் தன் மகளையும் எழுநூறு தோழிப் பெண்களையும் அவர்களுடன் பதினெட்டுக் குடிகளையும் சேர்ந்த ஆயிரம் கம்மாளக் குடும்பங்,
களையுைம் அனுப்பினான். அவர்கள் வந்திறங்கிய அதாவது அவ்வளவு பெரிய திரளான பரிவாரங்கள் வந்திறங்கிய இடத்துக்கு மாதித்த என்று பெயருண்டாகியது என மகாவம்சம் கூறுகின்றது. இது கி. மு. 6ம் நூற்றாண்டில் நடைபெற்றது.
இக்கருத்து மிகவும் தவறான கூற்று என இலங்கை வரலாறு அறிந்தவர்கள் கூறுகின்றார்கள். ஏனெனில் மாதோட்டத்தில் ஒருபலம்மிக்க நாகராட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கையில் இயக்கர்களைப் பகைத்துக் கொண்ட விஜயன் பலமிக்க நாகராட்சியையும் பகைக்க விரும்பி இருக்கமாட்டான். மாதோட்டத்தில் தான் கம்மாளர்களின் ஆட்சியும் ஆட்பலமும் கூட இருந்தது. இலங்கையை ஆண்ட முன்னரசர்களான குபேரன், இராவணன்,பத்மாசூரன் போன்றோரும்பத்மாசூரனின் தந்தை பிரபாகரன் கம்மாள இளவரசிகளைத் திருமணம் செய்துள்ளார்கள். இதனால் விஜயன் இயக்கரின் எதிர்ப்பைச் சமாளிக்க பக்கத்திலுள்ள பலமிக்க ஆட்சியாளர்களின் உதவியைப் பெறும் நோக்கோடு மாந்தை இளவரசியைத் திருமணம் செய்தான் என்பதே உண்மையாகும். இதை அடிப்படையாக வைத்தே மாந்தை மன்னன் தன் மகளுக்குப் பாது காப்புக்கு 1000 கம்மாளக்குடும்பங்களை உடனனுப்பினான். அவ்வாறில்லாது பாண்டியனின் சம்மந்தமாக இருந்திருந்தால் பாதுகாப்புக்கு படைப்பிரிவை அனுப்பியிருப்பான். அதைவிட்டுக் கம்மாளரை ஏன் அனுப்பவேண்டும்? அவ்வளவு தொகையான கம்மாளர்கள் பாண்டியநாடு முழுவதையும் சல்லடை போட்டாலும் கிடையாது. எனவே பாண்டிய நாட்டு இளவரசி என்பது, மகாவம்சத்தாரின் கற்பனை. மாந்தை இளவரசி என்பது சரியானதாகும். மாந்தை இளவரசிகள் நாகர் பரம்பரை யைச் சேர்ந்தவர்கள். நாகர்களைப் பற்றிய மிகத் தாறுமாறான கருத்துக்களை அதாவது நாகர்கள் பேய் பிசாசுகள் என்ற கருத்துக்களை மகாவம்சம் கூறியுள்ளது. அதேநாக பரம்பரையில் விஜயன் பெண்ணெடுத்தான் என எழுதினால் மல்லாந்துபடுத்துக் கொண்டு எச்சிலைத் துப்பியவன் கதை தங்களுக்கும் ஏற்படும் என்றும் விஜயன் மூலம் ஒரு புனித இனத்தை உருவாக்கத் திட்டமிட்டு இயக்கப் பெண்ணான குவேனியைக் காட்டுக்குத் துரத்திய மகாவம்சத்தார் மீண்டும் நாகரோடு தொடர்பைக் காட்ட
விரும்பாததாலே பாண்டியநாட்டு இளவரசியின் கதை புகுத்தப் பட்டது. ஆனால் விஜயன் திருக்கேதீச்சரத்திற்குத் திருப்பணி வேலை செய்தான் என கியு. நெவில் கூறியுள்ளார். விஜயனுக்கும் மாந்தைக்குமுள்ள தொடர்பையே இது காட்டுகிறது. எனவே விஜயனின் இரண்டாம் தாரம் பாண்டிய இளவரசி அல்ல மாந்தை இளவரசியாகும் என அறிஞர் பொ. சங்கரப்பிள்ளை தானெழுதிய "நாம் தமிழர்” என்னும் நூலில் கூறியுள்ளார்.
விஜயன் கதை ஒரு கட்டுக் கதை எனச் சிங்கள அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அவர்களும் சிங்கள இனத்தின் உண்மையான ஊரறிந்த பூர்வீகத்தை மறைக்கவே கூடியளவு கவனம் செலுத்துகின்றார்கள். எனவேதான் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்கதையாகின்றது. விஜயன் தமிழன், ஒரு சைவன் எனப் பல ஆதாரங்கள் வெளிவந்த பின்பே விஜயன் கதை கட்டுக் கதை எனச் சிங்கள அறிஞர் சிலர் கூற முன்வந்துள் ளர்கள். அப்படியானால் சிங்களவரின் உண்மையான மூதாதை இலங்கையின் பூர்வீகக் குடியளான நாகர், இயக்கர் என்பதை ஏன் அவர்கள் இன்னும் மறைக்க வேண்டும். இதைச் சிங்கள வர்கள் ஏற்றுக்கொண்டால் பிரச்சனையே தீர்ந்துவிடும் மறைந்து விடும்.
கி.மு. 161ம் ஆண்டில் எலேல மன்னனின் மாமன் மருமகன், எல்லாளனுக்கும் மருமகன் துட்டகைமுனுவுக்கும் நடைபெற்ற போரைக் கேள்வியுற்றுத் தன் மாமனாகிய எலேல மன்னனுக்கு உதவுவதற்காகப் பல்லுக்கன் என்ற இளவரசன் பெரும்படை யோடுமாதோட்டத்தில் வந்திறங்கினான். ஆனால் மாமன் இறந்து விட்டான் என அறிந்ததும் அவன் திரும்பிச் சென்றான். அதன் பின் கி. மு. 103ம் ஆண்டளவில் புலகத்தன் , பாகியன், பழைய மாறன், பிழைய மாறன், தாதிகன் என்போர் மாதோட்டத்தில் வந்திறங்கி அனுராதபுரத்தின் மேல் படை யெடுத்து வெற்றி கொண்டார்கள் என மகாவம்சம் கூறுகின்றது.
கி.பி.38ம் ஆண்டளவில் ஈழநாகன் என்ற மன்னனைச் சிற்ற ரசர்கள் துன்புறுத்த, அவனது பட்டத்து யானை அவனைச் சுமந்து கொண்டு மாதோட்டத் துறைமுகம் மூலம் அக்கரைக்கு அனுப்பியது என மகாவம்சம் கூறுகின்றது.
அடுத்த ஐந்நூறு ஆண்டுகளில் மாதோட்டத்தில் என்ன நடந்தது என்ற குறிப்புகள் சிங்கள வரலாற்று நூல்களில் காணப்படவில்லை. அக்கால கட்டத்தில் மாதோட்டம் சீரும் சிறப்பும் வாய்ந்த ஒருவர்த்தகத்தளமாக உருவெடுத்துக்கொண்டிருந்தது என்பதை பிறநாட்டு அறிஞர்களின் நூல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஈழத்திலிருந்துதந்தமும், ஆமை ஒடும், வாசனைத்திரவியமும் உரோமபுரிக்கு வந்தன என்று கி. பி. 1ம் நூற்றாண்டில் உரோம புரியில் வாழ்ந்த ஸ்ரூபோ (Strabo) என்னும் அறிஞர் கூறுகின்றார். அதே காலப்பகுதியில் வாழ்ந்த பிளினி என்னும் அறிஞர் இலங்கை யின் பிரதான நகரமான பலேசி முண்டல் ஒரு துறைமுகத்தை அடுத்திருந்தது எனக்கூறுகின்றார். இந்தப் பலேசி முண்டல் பாலாவி முண்டல் என்றும் அதற்குப் பக்கத்திலிருந்த மகாகூர்ப என்னும் பெரிய ஏரி இப்போது கட்டுக்கரை குளம் என்றும் சிலர் கருதுகின்றார்கள். மாதோட்டம் மூலம் வந்த முத்துக்களையும் பட்டாடைகளையும் அணிந்து வாசனைப்பொருட்களைப்பாவித்து ஆடம்பர வாழ்க்கையை உரோமர்கள் நடத்தினார்கள் என
பெரிபுளுஸ் (Periplus) நூல் கூறுகின்றது.
கி.பி. 1800 ஆண்டுகட்குமேலைத் தேசங்களோடு வர்த்தகம் நடாத்திய துறைமுகப் பட்டணம் மாதோட்டம் என்பது கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான தொலமி (Prolemy) தான் வரைந்த பூகோளப் படமொன்றில் இலங்கையின் அன்றைய நகரங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மாதோட்டத்தை மாதொட்டு என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளதில் இருந்து அறிய முடிகின்றது. அது மட்டுமின்றி மாதொட்டுக்கு முன் பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார். மாதோட்டத் துறைமுகம் மூலம் சீன மன்னர்களும் சிங்கள மன்னர்களும் தொடர்பு கொண்டார்கள் என்பதைச் சரித்திரம் கூறுகிறது.
கி.பி 5ம் நூற்றாண்டு வரை மாதோட்டம் பிரசித்தி வாய்ந்த வர்த்தகத் தளமாக விளங்கியது என்பதை பல நாட்டு அறிஞர்கள் வாயிலாக அறிகின்றோம். மாந்தையில் வாழ்ந்த பஞ்ச தொழில கர்த்தாக்களான கம்மாளர்கள் தாங்கள் செய்யும் உலோக, மர, கல், கைப்பணிப் பொருட்களை மாதோட்டத் துறைமுகம் மூலமே வெளிநாடுகட்கு அனுப்பிப் பொருளிட்டினார்கள். அதுமட்டுமின்றி ஈழத்து உணவுவகைகள், முத்துபவளம், நவரெத்தினங்கள், யானை, யானைத்தந்தம், மயிற்றோகை, கறுவாய், மிளகு, ஏலம் போன்ற வாசனைத் திரவியங்கள் இங்கிருந்துவெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாட் டிலிருந்து பளிங்குப் பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், மட்பாத்திரங்கள் அகில் சந்தனம் முதலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
கி. பி. 4ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டின் இளவரசர் உலகநாதனும் இளவரசி உலகநாச்சியும் புத்தபிரானின் தந்தச் சின்னத்தைக் கொண்டு வந்தது மாதோட்டத் துறைமுகம் வழி யாகத் தான். அவர்கள் ஒரு இராப் பொழுதை அங்கே இருந்த சைவ ஆலயத்தில் கழித்தார்கள் என பாளி நூலாகியதாதவம்சம் கூறுகின்றது. இவ்வாலயம் பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரம் என அறிஞர்கள் கூறுகின்றனர்கள்.
இலங்கையில் ஆங்கிலத் தேசாதிபதியாக இருந்த சேர் எமர்சன் ரெனட்ன் என்பர் தான் எழுதிய “இலங்கை" என்னும் வரலாற்று ஏட்டில் மாந்தையில் பண்டுதொட்டு நுட்பமான கப்பல் கட்டும் தொழில் இருந்து வந்தது. அவை இரும்பாணி இன்றியே கட்டப்பட்டன எனக் கூறியுள்ளார்.
கி. மு. 231ம் ஆண்டில் இலங்கையை ஆண்ட சங்கதீசன் என்னும் மன்னன் தான் கட்டிய ரூபன்வெளி தாது கோபுரத்தின் உச்சியில் இடிமின்னலை தவிர்க்கக் கூடிய கருவி ஒன்றை மாந்தைக் கம்மாளரைக் கொண்டு செய்து வைத்தான். மாந்தை யில் வாழ்ந்த கம்மாளருக்குக் காந்தத்தைக் கையாளும் திறமை மிகுந்திருந்தது என பெர்குசன் (Ferguson) என்னும் அறிஞர் தான் எழுதிய "சிலோன்” என்னும் நூலில் எழுதியுள்ளார்.
கி.பி.6ம்,7ம் நூற்றாண்டுகளில் மாதோட்டம் மிகவும் சிறப்புற்று விளங்கியது. பலநாடுகளிலிருந்து வர்த்தகர்கள் இங்கு வந்து கூடினார்கள். உலகின் பாகங்களிலிருந்தும் பண்டங்கள் மாதோட் டத்தில் வந்து குவிந்தன எனக் கிரேக்க அறிஞர் கொஸ்மன் இன்டிக்கோ பிளஸ்தேஸ் தமது நூலில் கூறியுள்ளார். வர்த்தக விருத்தியால் மாதோட்டத்தில் செல்வம் சிறப்புப் பெருகியது. மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மாந்தை நகரைச் சுற்றிப் பெரிய மதிலும் நான்கு வாசல்களும் இரண்டு அகழிகளும் இருந்தன. அகலமான தெருக்களும் மாடமாளிகைகளும், கூடங் களும் மாடங்களும் நிலா முற்றங்களும், நீச்சல் தடாகங்களும் இருந்தன. திருகேதீச்சரம் புகழ்வாய்ந்த ஆலயமாக இருந்ததால் சுந்தரரும் சம்மந்தரும் பாடிப்பெருமைப்படுத்தினார்கள்."பாலாவி யின் கரைமேல் திடமாக உறைகின்றான் திருக்கேதீச்சரத் தானே” என்றும் “வறிய சிறை வண்டு யாழ் செயு மாதோட்ட நன்னகர்” என மாதோட்டத்தின் இயற்கை அழகைப் பாடு கின்றார். திருக்கேதீச்சரம் பற்றி கதிர்காம கல்வெட்டொன்றில் பெளத்த ஆலயத்தின் பரிபாலினத்துக்குரிய விதிகளைக் குறித்துவிட்டு அவற்றை மீறுவோர் மாதோட்டத்தில் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார் எனக் கூறுகின்றது.
கி. பி. 935ம் இராசசிம்ம பாண்டியன் சோழர்கட்குப் பயந்து ஈழ மன்னன் உதவியை நாடி மாதோட்டத்தில் வந்து தங்கினான் என்றும் உதவி கிடையாததால் கேரள நாட்டுக்குச் சென்றான் எனச் சூளவம்சம் கூறுகின்றது. கி. பி. 947ம் ஆண்டில் பரந்தாக சோழனின் படை இராசசிம்ம பாண்டியன் விட்டுச்சென்ற மகுடத்தை மீட்டுச்செல்ல மாதோட்டம் வந்து வெற்றி பெற்று மகுடத்துடன் திரும்பிச் சென்றது. பின் 998ம் ஆண்டு இராசராச சோழன் படைகள் மாதோட்டத்தில் வந்திறங்கி மாதோட்டத் தையும் உத்தராட்டை என்ற வடபகுதியையும் தம்வசமாக்கி னார்கள். அதன்பின் இராசேந்திர சோழன் ஈழம் முழுவதையும் கைப்பற்றி 77 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். திருக்கேதீச்சரக் கல்வெட்டு ஒன்று மாதோட்டம் பற்றிய அரிய விடயங்களைத் தருகின்றது. மாதோட்டத்தில் ஒரு பெரிய தெருவும் கம்மாளர் சேரியுமிருந்தது எனக் கூறுகின்றது. மாதோட்ட மாந்தையை ஆண்ட மயன் இராவணனுக்காக லங்காபுரியையும் வானவூர்தி ஒன்றையும் செய்து கொடுத்தான் என இராமாயணம் கூறு கின்றது.
போதிய பலமுடைய தமிழ்குடிகள் அருகில் இருந்திராவிட்டால் எல்லாளன் அன்னியரான சிங்களவரை 43 ஆண்டுகள் ஆண்டி ருக்க முடியாது. தென்னிந்தியாவிலிருந்து அடிக்கடி ஏற்பட்ட குடிவரவுகளால் அக்காலத்தில் வடபகுதி தமிழ் நாடாகவே இருந்தது. மன்னார் மாவட்டத்தில் சிங்களப் பெயர்களோ அல்ல இனங்களோ! முற்றாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கதாகும் என வரலாற்று ஆசிரியர் எச். டபிள்யு. கோடிறிங்கன் கூறுகின்றார்.
இக்கூற்றின்படி மன்னார்ப் பகுதி மாதோட்டத்தை உள் வாங்கிய பகுதியாகும். மாதோட்ட ஆட்சியின் சிறப்பும் வலிமையும் புலப்படுகின்றது.
ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு மேலாக ஈழநாட்டின் நடுநாயகமாகவும் நாகரிக தீவகமாகவும் வர்த்தக வாணிபநிலைய மாகவும் உயர்ந்து ஈழத்தின் கலாச்சாரத்தை கடல் கடந்து பரப்பிய மாதோட்டம் இன்று புதைபொருள் ஆராச்சியின் ஆய்வின் மையமாகியுள்ளது. 1981ம் ஆண்டு யப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரும் வென்சவேனிய அறிஞர்களும் இப்பகுதியை ஆய்வு செய்து கொடுத்த ஆய்வறிக்கையை இலங்கை தொல்பொருள் திணைக்களம் வெளியிடாது மறைத்துக் கொண்டிருக்கின்றது. அது வெளிவந்தால் மாதோட்டத்தின் மகிமை நாடறியும், ஏடறியும் நல்லவர்கள் உள்ளம் எல்லாம் துள்ளி விளையாடும்.
பன்னூறு ஆண்டுகளாக ஈழமக்களின் வாழ்க்கையிலும் சரித்திரத்திலும், கலாசாரத்திலும், நாகரிகத்திலும் முக்கிய முதலிடத்தை வகுத்த மாதோட்டம் இன்று மறைக்கப்பட்டுள்ளது. இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டிய பொறுப்பும் கடமையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கரங்களுக்கே உண்டு.
இக்கடமை காய்தல் உவர்த்தலின்றிநிறைவேறுமேயானால் உலக நாகரிகத்தின் பிறந்தகம் மாதோட்டம் என்ற உண்மை உலகெல்லாம் பரவும். வான்முட்ட இலங்கையின் புகழ் விளங்கும்.
மாதோட்டம் அல்லது மாந்தை என்னும் துறைமுகம்
மன்னாருக்கு சமீபத்தில் இருந்த பண்டைய சிறப்புமிக்க நகராகும்.
இந்த நகரை விஸ்வகர்மாவின் மூன்றாம் மகனான துவட்டா என்பவரே நிர்மாணித்து அவரும் அவர் சந்ததியினரும் அதிலி ருந்து ஆண்டு வந்தார்கள். நகரை மாந்தை என்று அழைத்தார் கள். இது மாதோட்டப்பகுதியின் இராசதானியாகும். இதன் கண் அமைந்த ஆலயத்தைத் திருக்கேதீச்சரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். இத்தலமே பேர்பெற்றதும் பாடல் பெற்றதுமான தலமாகும்.
இந்நகர் பற்றி ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த யாத்திரிகரான பெற்றலோக்கி (Battiokki) என்பவர் மாந்தை அல்லது மாதோட்டம் கம்மாளரால் கட்டப்பட்ட பெருநகரமாகும். இந்நகரில் பராக்கிரம மும் செல்வமுமிக்க மக்கள் பல காலமாக வாழ்ந்து வந்தார்கள் எனக் கூறியுள்ளனர்.
துவட்டா தெய்வீகத்தச்சரும் தேவகுருவும், ஜகக்குருவுமான படைத்தல் கடவுள் விஸ்வகர்மாவின் மகனாவார். நாடு நகர் அமைப்பதில் கைதேர்ந்த சிற்பி. சகலகலாவல்லவன் திரிகால முணர்ந்தஞானி, கட்டிடக்கலை வல்லவன், கற்றுணர்ந்த மேதை. மக்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் ஆற்றலும் அறிவும் மிக்க சாதனையாளர். இதனால் மக்கள் அவரை மாதுவாட்டா என அழைத்தார்கள். அவரால் வடிவமைக்கப்பட்ட பகுதியை மாதுவட்டபுரம் என்றும் அழைத்தார்கள்.
மாதுவட்டபுரம் காலத்தால் மருவிமாதோட்டம் ஆகியது எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை கூறுகின்றார். அன்றும் இன்றும் மக்களுக்குத் தொண்டாற்றிய மகான்கள் சாதனையாளர்கள் தியாகிகள் பெயர்களை நினைவில் நிறுத்தும் வகையில் அவர்கள் வாழ்ந்து வளர்ந்த நாட்டுக்கு, நகருக்கு, தெருவுக்கு பெயர் வைக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. அதே நடைமுறை யில் மாதுவட்டாவின் பெயரையே அவரால் உருவாக்கப்பட்ட நாட்டுக்கோ அல்லது நகருக்கோ வைத்ததைத் தவறாகக் கொள்ளமுடியாது. பழந்தமிழர்களின் நன்றி உணர்வின் வெளிப்பாடே அதுவாகும்.
மாதோட்டம் பற்றி சிங்களவரலாற்று நூல்களான மகாவம்சம். ராஜவாளிய என்பன மாதித்த, மாதோட்ட என அழைக்கின்றனர். மா - பெரிய, தோட்ட என்றால் சிங்களத்தில் இறங்கு துறையென பொருள்படும். மாந்தையை அண்டியபகுதிகளில் வாழ்ந்த மக்களை நாகர்கள் என தட்சண கைலாச புராணமும் முதலியார் சி. இராசநாயகமும் கூறுகின்றார்கள்.
மாதோட்டத் துறைமுகம் இலங்கையில் முதல் முதல் அமைக் கப்பட்ட துறைமுகமாகும். இத்துறைமுகம் மூலம் திரைகடல் ஒடித்திரவியங்களைக் குவித்து செல்வச் செருக்குடன் சிறப்பா கவும் சீராகவும் நாகர்கள் வாழ்ந்தார்கள். நாகர் நாகரிகம் என்ற சொற்கள் நாகர்கள் மூலமே கிடைக்கப் பெற்றது என்பது முதலி யார் சி. இராசநாயகத்தின் கருத்தாகும். முதல் முதல் நகர் வாழ்க்கையை அறிமுகமாக்கியவர்கள் நாகர்கள் ஆகும்.
மாந்தை திட்டமிட்டு சிறப்பாகவும் சீராகவும் அமைக்கப்பட்ட நகராகும். பாதுகாப்பு அகழிகள், பரந்து விரிந்த வீதிகள், பாதுகாப்பு அரண்கள், கூடங்கள், மாடங்கள், மாளிகைகள், கோபுரங்கள் நிலாமுற்றங்கள். நீர்த்தடாகங்கள், நீச்சல் குளங்கள் போன்ற இன்னோரன்ன பல அமைப்புக்களை தன்னகத்தே கொண்டி ருந்தது. அதுமட்டுமல்ல காந்தத்தால் கோட்டை அமைத்து அதில் இருந்து கோலோச்சினார்கள் நாகர்கள். இதைச் சீன யாத்திரி கரான குவான்சியாங் தனது பயணக்குறிப்பில் குறித்துள்ளார். அக்காலத்தில் உலோகங்களால் நகர் அமைப்பது வழக்கில் இருந்திருக்கின்றது. திரிபுரம் என்பது செம்பு, வெள்ளி, இரும்பாலமைந்த நாகர்களின் கோட்டையாகும். தமிழ் இலக்கி யங்களில் புறநாநூற்றில்
“செம்பு புனைந்தியற்றிய சென்டும் புரிசை
ஊலாராக விகைத்துவரா” எனக் கூறுகிறது. இதன் மூலம் துவாரகையின் செம்பிலான கோட்டை ஒன்று இருந்தது என்று புலப்படுகின்றது.
“ஒன்னாருக்கும் கடும் தறற் தூங்கையில் எறிந்த நின் நுங்க நேர்ந்த நினைப்பின்” என்றும்.
சிறுபானாற்றுப் பாடலில் "தூங்கையில் எறிந்த செம்பியன்” என்று வரும் அடிகள் உலோகநகரங்கள் அன்று இருந்ததை உறுதிசெய்கின்றன.
"விண்தோய் மாடத்தே விளங்கு சுவர் உடுத்த” என்று பெரும்னாற்றுப்படை செய்யுளிலும்
மாடமோங்கிய மல்லன் மூதூர் என்று நெடுநல் வாடையும் மாந்தையைக் குறிப்பிடுகின்றனர்.
மாந்தைநகர் உறைவோருள் லோகத்தில் வாணிபமே புரிவோர்.
காந்தை மலைக்குரியோன் பாஞ்சாலரின் கண்ணுவர் தோன்றினாரே என்றும்,
காந்தமும் தடமதிலும் கமலப்பொழிலும் உள்ள மாந்தை.
முனா அதி யின் குறிப்பில் காணலாம். “பெருந்தோட்ட மன்னார் பிசைவரோ குட்டுவான் மாந்தை” என்ற பாடல்கள் இந்நரில் இரும்புக்கோட்டை இருந்ததைக் குறிக்கின்றது. உறுதிசெய்கின்றது. இந்த இரும்புக் கோட்டையை காந்தக் கோட்டை என மக்கள் அழைத்தர்கள். இது சம்பந்தமான குறிப் புக்கள் அராபியக் கதைகளிலும் வருகின்றது.