விஸ்வகர்ம பிராம்மண பஞ்சகிருத்தியம்
விஸ்வகர்மப் பிராம்மண சந்ததியார்கள் பூவுலகில் மக்களுக்கு பலவகைப்பட்ட வசதிகளை தருவதற்கு இரும்பு மரம் கல் செம்பு பொன் முதலியவற்றால் நடத்தப்படும் பஞ்ச கிர்த்தியமெனும் ஐந்தொழில்களை விவரிப்போம் , இரும்பு வேலைக்கு அதிபரான சானகரிஷியும் அவர் சந்ததியாராகிய இருபத்தைந்து ரிஷிகளும் , ஏறுமுனை , தராசுமுனை . கதிர்முனை , எழுத்தாணிமுனை , கத்திமுனை என்னும் ஐந்து இரும்புத் தொழில்களையும் உலக சம்ரக்ஷணார்த்தம் நிலங்களை உழுது பயிரிடுவதற்குக் கொழுக்களையும் , பண்டங்களை நிறுத்தற்குத் தராசுக்களையும் , ஆடை முதலியவைகளை நெய்தற்கும் , அதற்கான நூல்களை நூற்பதற்குமான நீண்ட கதிர் , இராட்டினம் முதலிய கருவிகளையும் சகல இயந்திரங்களையும் , வேத இதிகாச புராணங்களை எழுதிப் பதனப்படுத்தற்கான கூர்மையான எழுத்தாணிகளையும் , தாயின் உதரத்தினின்றும் குழவியைப் பிரித்தற்கு உந்திக்கொடியை அறுத்தல் முதலிய தொழில்கட்கு இன்றியமையாத கத்திகளையும் , மற்றும் அரசர்களுடைய வாட்படை , உடைவாள் , கைவாள் , சமுதாடுகளையும் , எஃகுக் கவசச் சட்டைகளையும் , யுகத்தில் சிரங்கள் சேதமாகாதபடி காக்கின்ற முகமூடிக் கவசங்களையும் , கரங்கள் வெட்டப்படாமலிருப்பதற்கான வாகுவலங்களையும் , அம்பு , அம்புராத்தோணி , வில் முதலியவைகளையும் . கதாயுதங்களையும் , ஈட்டி , இருப்புலக்கை , மழு , சக்ர வச்ராயுதங்களையும் போர்க்கோடரி முதலிய கைவிடாப் படைகளையும் , அங்குசம் , கடிவாளங்களையும் , பகைவர்களைப் பிணிக்கும் கை , கால் விலங்குகளையும் , கடப்பாரை , மண்வெட்டி , கோடரி , குறடுகள் , சங்கிலிகள் , துலாக்கோல்கள் படிக்கற்கள் , இரும்புப்பெட்டகங்கள் , பூட்டுத் திறவுகோல்கள் , வண்டிகள் , தேர்கள் , இரதங்களுக்கான இரும்பு அச்சுக்கள் , கதவின் கீல்கள் , முளைகள் , தாழ்ப்பாள்கள் , இன்னும் திரைகடலில் ஓடும் கப்பல்கள் , தோணி , ஓடம் ஆகியவைகளுக்கான செம்புக்கவசங்கள் , பலதரப்பட்ட ஆணிகள் முதலிய பலவற்றைச் செய்து கொடுப்பவர்களாவர் .
சனாதன ரிஷி முதலாகக் கொண்டு இருபத்தைந்து ரிஷி கோத்திரத்தில் பிறந்த மரவினைஞர்களான தச்சர்கள் சிற்ப சாஸ்திர ரீதியாக நிலங்களை உழுதற்குக் கலப்பைகளையும் , யாகாக் கினி யில் அவிசொரிதற்கு ஸுர்க்கு என்னும் நெய்த்துடுப்புக்களையும் ; வில்லுகளையும் , வண்டி இரதச்சக்கரங்களையும் , தேர் இரதம் வாகனாதிகளையும் , பாரங்களைச் சுமக்கும் வண்டிகளுடன் அலங்கார பவனி வரும் அஸ்வங்கள் . ரிஷபங்கள் பூட்டப்படும் வண்டிகளையும் மத்தளம் வீணை , யாழ் , தம்பூறு , புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களையும் , இடக்கை வாத்தியங்களையும் , குடை ஆலவட்டம் . சிற்றாலவட்டம் , கொடிமரம் போன்ற விருதுகளையும் , தண்டு கமண்டலங்களையும் , பாதக்குறடுகளையும் , வீடுகளுக்கான விட்டங்கள் , ஸ்தம்பங்கள் , தூண்கள் , பலகணிகள் , கதவுகளையும் , கட்டில்கள் , முக்காலிகள் , நாற்காலிகள் , பீடங்கள் . தூங்கு மஞ்சங்கள் , சிங்காதனங்கள் . ஊஞ்சல்கள் , குடும்பத்துக்கான நானாவித தட்டுமுட்டுக்கள் முதலிய பற்பல உபயோகமான சாமான்களையும் , மானசம்ரக்ஷணார்த்தம் , பலவித கைத்தறி . இராட்டினத்தறி ஆகியவற்றையும் லோகோபகராத்தமாகச் செய்து தருபவர்களாவர் .
அபுவனச ரிஷி மூலமாக வந்த இருபத்தைந்து ரிஷிகளின் சந்ததியார்களின் வழியே உலோகங்களால் ஆகிய சமஸ்தான அலங்கார தீபங்கள் , பலவகைப்பட்ட மணிகள் , திருச்சின்னங்கள் . தாம்பரம் , பித்தளை , வெண்கல முதலியவற்றாலாகிய மிடாக்கள் , கொப்பரைகள் , சேமக்கலங்கள் அழகிய கலசங்கள் பற்பல விதமான , குடங்கள் . கொம்புகள் , தாரைகள் . தாளங்கள் , கிண்ணங்கள் பலவித ஜலபாத்திரங்கள் ஆகிய நானாவித தட்டு முட்டுகள் , ஆலய விக்ரகாதி கவசங்கள் , செப்பேடுகள் ஆகியனவற்றை பூமியிலுள்ள பலவாகிய சமயத்தோர்கள் விரும்புகின்றவாறு செய்து கொடுப்பவர்களாவர்.
பிரத்னச ரிஷி முதலாகிய இருபத்தைந்து ரிஷிகளின் கோத்திரங்களில் பிறந்தவர்கள் , சிற்ப சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவாறு கர்ப்பக்கிரங்களையும் , அர்த்த மண் டங்கள் மஹாமண்டபங்கள் சபாமண்டபங்கள் முதலிய வற்றையும் , தேவதா நிர்மாணங்களையும் , பலவகை மதங்களுக்குரிய பிரதிஷ்டைகளையும் , நாடுகளையும் , நகரங்களையும் , கிராமங்களையும் நெடுமலையாலும் விரி நதிகளாலும் சூழப்பட்ட சிற்றுர்களையும் , முல்லை , குறிஞ்சி , பாலை , மருதம் , நெய்தல் , சூழ்ந்த நாடுகளையும் , அவைகளுக்கேற்ற கோவில்களையும் , கோபுரங்களையும் , ஸ்தூபிகளையும் சந்திரகாந்தக் கற்களாலும் , பளிங்குக் கற்களாலும் , ஆகிய மேடைகளையும் , மதில்கள் , அகழிகள் சூழ்ந்த கற்கோட்டைகளையும் , அரண்மனைகளையும் , ஆஸ்தான மண்டபங்களையும் , தரும் சத்திரங்களையும் , வித்யாசாலைகளையும் , வேதிகைகளையும் , திருக்குளங்கள் , தடாகங்கள் , சுனைகள் , குகைகள் ஆகியவற்றையும் , வாழையடி வாழையென மக்கள் பாரம்பர்யமாக வாழ்தற்குரிய , மாளிகைகள் சிற்பத்தாலாகிய சிறந்த வீடுகளையும் , நிர்மாணித்து லோகத்தைப் பரிபாலிப்பவர் ஆவார்கள் . மேலும் இவர்கள் மக்கள் மோட்ச சாதனத்தைச் சுலபத்தில் அடைவதற்கான , சகுணோபாசனைக்குரிய பற்ப கடவுளர்களை மக்கள் பரிபக்குவத்திற் கேற்றவாறு வழிபடுவதற்குச் செய்து கொடுத்தும் , இன்னும் செய்து கொடுப்பவர்களும் ஆவார்கள் . புண்ணிய பூமியாகிய இந்நாட்டின் கண்ணுள்ள . சிற்பத்தாலாகிய எண்ணிறந்த தேவாலயங்கள் , இச்சந்ததியாரின் திரிகால ஞானத்திற்கும் , உயரிய தொழில் வன்மைக்கும் போதிய சான்றுக்களாகும் .
சுபானச ரிஷி மரபில் வந்த இருபத்தைந்து ரிஷிகளின் சந்ததியார்கள் , ராஜக்கிரீடங்களையும் , செங்கோல்களையும் , மார்பணிகளையும் , பதக்கங்கள் , மகர குண்டலங்கள் , காதணியாகியவைகளையும் , கரசரணாதிகளில் அணியக்கூடிய சகல விசித்திரமான ஆபரணங்களையும் , முக்கியமாக , மனைவி , மக்கள் , குலம் , கோத்திரம் , சட்டப்படி வார்சு பாத்தியம் முதலியவைகளைச் சித்திக்கச் செய்வதும் , மாதர் , ஆடவர்களைக் கற்பின் வழியும் கிருஹாச்சிரம தர்மம் வழுவாதும் நடக்கச் செய்வதற்கான திருமாங்கல்ய முத்திரைகளையும் , நவமணிகள் பதிக்கப்பெற்று ஒளிவீசும் பலப்பட்ட மோதிரங்கள் . மாதாணிகளையும் , அவரவர்கள் விரும்பியவாறும் , பொருளாதாரத்துக் கேற்றவாறும் செய்து கொடுத்து ஒவ்வொரு கிருஹத்தையும் சிறிய பொக்கிஷச்சாலையாகவும் , அவைகளை வேண்டும்போது பண்டமாற்றல் மூலம் , விற்று பணமாக்கவும் செய்து தரக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் ஆவார்கள்,
No comments:
Post a Comment