கம்மாளர்கள் தங்கள் குலதெய்வமாகக் காளியை வழிபட பல காரணங்கள் உண்டு. விஸ்வகர்மாவின் ஐந்து முகத்திலிருந்து தோன்றிய ஐந்து புதல்வர்களின் மனைவிமாரும் சக்திகளே ஆகும். "தாயிற்சிறந்த கோயிலில்லை" என்பதற்கொப்ப அவர்கள் சக்தியை வழிபட்டார்கள். சூரிய சர்ப்ப வழிபாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட வழிபாடு தாய் வழிபாடாகும். கலைகளோடு தொடர்புடைய கலைஞர் சமுதாயம் கம்மாளர்கள், கலைத்தெய்வத்தை குலதெய்வமாக்கிக் கொண்டார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் ஒரு போட்டி நடைபெற்றது. அதாவது அழகில் சிறந்தவர் யார் என்பதே அப்போட்டியின் தொனிப்பொருள். பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் ஏற்பட்ட போட்டிக்கு நடுநின்று தீர்ப்பு வழங்கத் தேவர்கள் முன்வரவில்லை. பிரமனும், விஷ்ணுவும், போட்டிக்குத் தீர்ப்பு அளிப்பதிலிருந்து நழுவிக் கொண்டார்கள். எனவே தீர்ப்பளிக்க வேண்டிய பொறுப்பை தேவகுருவான விஸ்கர்மாவிடம் ஒப்படைத்தார்கள். விஸ்வகர்மா நிலைமையின் கடுமையைப் புரிந்துகொண்டு ஒரு நிலைக்கண்ணாடியை உருவாக்கிக் கொடுத்து இதில் உங்களை நீங்களே பார்த்து முடிவைத் தெரிந்து தெளிந்துகொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார். பரசிவன் பார்த்தார். கண்ணாடியில் தன் உருவம் காட்டிய கோலம் கண்டு தலைகுனிந்தார். பார்வதி கண்ணாடியைப் பார்த்தார். பரவசத்தால் குதித்தார், குதுகலித்தார். போட்டி என்றால் பொறாமை எழாதிருக்காது. அது பரமசிவனையும் பாராது பார்த்திபனையும் பாராது. வெட்கித் தலை குனிந்த
வேதனை ஒரு பக்கம், எதிரியின் கேலிக்கையால் ஏற்பட்ட தாக்கம் ஒரு பக்கம் வாட்டி வதைக்கத் தன்னை மறந்தார் பரமன். கோபக்காரனுக்குப் பாவம் புரிவதில்லை, பழிபாவத்திற்கு அஞ்சமாட்டார்கள் என்பதைப் பரமனே காட்டினார், சினந்தார், சீறிப்பாய்ந்தார். தன்னைப் படைத்த விஸ்வகர்மனுக்கே பிடி சாபம் என்றார்."உன் குலம் என்றும் ஒற்றுமை இன்றி வாழும்" என்றார். சாபத்தைப் பெற்ற சாது சும்மா இருப்பாரா? விஸ்வப்பிரம்மம் அல்லவா? "உடனே பிடி சாபம்" என்றார். இன்று முதல் என்றும்
நீ அரூபியாகவே இருப்பாய் என்றார்.
இவ்வாறு இருவருக்கும் இடையில் நடைபெற்ற சாபப் போட்டியைப் பார்த்த பார்வதி, தன்னால் ஏற்பட்ட சாபத்தை தீர்ப்பதற்காக விஸ்வகர்ம குலமக்களைக் காக்கும் காவல் தெய்வமாகத்தன்னை அர்ப்பணித்தார். அன்று முதல் விஸ்வகர்ம குலமக்கள் தங்கள் குலதெய்வமாகக் காளியை வழிபடத் தொடங்கினார்கள்.
No comments:
Post a Comment