Translate

Wednesday, 5 April 2017

மாமல்லபுர சிற்பங்கள்

வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரம்


சிற்பங்கள் மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்தி ருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர். கட்டுமானக் கோயில்கள்: ஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்த கோயில்களை கருதலாம். மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளன : முகுந்தநாயனார் கோயில் (தரையில் கட்டப்பட்டது), உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் (மலைமீது கட்டப்பட்டது), கடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை) புடைப்புச் சிற்பத்தொகுதிகள்: இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை: அர்ச்சுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதி மீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது), முற்றுப்பெறாத அர்ச்சுனன் தபசு, விலங்குகள் தொகுதியாகும். அர்ச்சுனன் தபசு சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப் படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன. அருச்சுனன் பாசுபத ஆஸ்திரத்தை வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒருசிலர், பகீரதன் கங்கையை வர வைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள். ஓர் அறிஞர், இந்தச் சிற்பமே ஒரு சிலேடை என்றும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சி என்றும் சொல்கிறார். சமீபத்தில் ஓர் அறிஞர், இங்கே தவம் செய்வது பாசுபத அஸ்திரம் வேண்டி நிற்கும் அர்ச்சுனன்தான் என்றும் ஆனால் இந்தச் சிற்பம், மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமயமலையைச் சித்திரிக்கும் காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இந்தச் சிற்பத் தொகுதியைக் குறிப்பிடவேண்டும். இந்த ஒரு திறந்தவெளிப் பாறையில் சிற்பிகள் 150க்கும் மேற்பட்ட சிற்பங்களை செதுக்கியுள்ளனர். இவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்: அர்ச்சுனன் சிவனிடம் பாசுபத அஸ்திரம் வேண்டி செய்யும் தவம்: இதில் உடல் ஒட்டி, எலும்பும் நரம்பும் வெளியே தெரியக்கூடிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்யும் அர்ச்சுனன், கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றி பூதகணங்கள். இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே கங்கை ஆறு ஓடிவருமாறு அழகாகச் செய்யப்பட்டிருக்கும் பாதை. அதில் காணப்படும் நாகர்கள். மழை பொழியும்போது இந்தப் பாதை வழியாக ஆறுபோலவே ஓடும் காட்சியைக் காணலாம். கங்கை ஆற்றின் இருபுறமும் ஆற்றை நோக்கி வரும் சூரியன், சந்திரன், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், கின்னரர்கள் (கீழுடல் பறவை, மேலுடல் மனிதர்). வதரியாசிரமம் (பத்ரிநாத்) எனப்படும் ஒரு திருமால் கோயில், அதன்முன் அமர்ந்திருக்கும் சில முனிவர்கள் (இவர்களின் தலை துண்டாகியுள்ளது), கங்கை ஆற்றில் குளித்துச் சடங்குகள் செய்யும் பக்தர்கள். வேடர்கள். இவர்கள் வேட்டையாடிய பொருள்களைக் கையில் எடுத்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு விதமான விலங்குகள், பறவைகள்: மாபெரும் யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவை. குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட் டுள்ளன. இவற்றுக்கு இணையாக இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாறை சிற்பங்களைக் காண்பது அரிது. மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுதி மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, துர்க்கை (சக்தி) சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுர மர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள். வராக சிற்பத் தொகுதி வராக மண்டபத்தில் இருக்கும் நான்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை ஹிரண்யாட்சண் என்று அரக்கன் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, திருமால் பன்றி உருவெடுத்துக் கடலுக்கு அடியில் சென்று அரக்கனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமிதேவியை மீட்டெடுத்து மேலே கொண்டுவரும் காட்சியே இங்கே காட்டப்பட்டுள்ளது. திரிவிக்கிரம சிற்பத் தொகுதி வராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு சிற்பத் தொகுதி, திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுப்பதாகும்.

No comments: